Tuesday, August 2, 2016

ஓர் அடிமையின் கதை-சோஜோர்னர் ட்ரூத்



அமெரிக்காவில் வாழ்ந்த ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட காலக்கட்டம். அடிமை வாழ்வு என்றால் கற்பனைக்கும் எட்டாத கொடூரம் நிறைந்த  வாழ்க்கை. நாள் முழுவதும் கடினமான வேலை. மிகக்குறைவான உணவு. அனல் தெறிக்கும் வார்த்தைகள், அடிகள்... சில நேரங்களில்  கொலைகளாகவும் தண்டனைகள் முடியும். அடிமைகளுக்குப் பிறந்த குழந்தைகளும் அடிமைகளே. அடிமையையும் அடிமைக் குழந்தைகளையும்  யாருக்கு வேண்டுமானாலும் விற்கும் அதிகாரம் அடிமைகளின் உரிமையாளர்களுக்கு உண்டு.

அடிமைகள் குடும்பமாக வசிக்கவே இயலாது. பலருக்கும் விற்கப்பட்டு, உறவுகள் தொடர்பற்றுப் போய்விடும். குளிருக்கு ஏற்ற உடை கிடைக்காது.  தூங்குவதற்கு நல்ல இடம் இருக்காது. ஆண்களும் பெண்களும் கால்நடைகளைப் போல ஓர் அறையில் உறங்க வேண்டும். இந்தக் கொடுமையில்  இருந்து தப்பிச் செல்வது அவ்வளவு எளிதல்ல... மீண்டும் மாட்டிக்கொண்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

இப்படிப்பட்டச் சூழலில், 1797ம் ஆண்டு ஓர் அடிமை தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் இஸபெல்லா. 12 குழந்தைகளில் ஒருவராக இஸபெல்லா  இருந்தாலும் அவரது சகோதர, சகோதரிகளை அவர் பார்த்ததில்லை. பலரும் பல்வேறு நபர்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு  குழந்தை விற்கப்படும்போதும் அம்மாவின் துன்பத்தைக் கண்டு கலங்கிப் போனார் இஸபெல்லா. அதுபோன்ற நேரங்களில், “கடவுளை முழுதாக நம்பு.  நம் கஷ்டங்களுக்கு எல்லாம் ஒருநாள் விடிவு காலம் வரும் என்பார் அம்மா.

இஸபெல்லாவும் கடவுள் மீது அதிக ஈடுபாடுகொள்ள ஆரம்பித்தார். 9 வயதில் இஸபெல்லாவுக்கும் அந்தத் துயரம் வந்து சேர்ந்தது. அவர் ஜான் நீலி  என்பவரிடம் விற்கப்பட்டார். செம்மறி ஆடுகளுடன் இஸபெல்லாவையும் சேர்த்து நூறு டாலர்கள் கொடுத்து வாங்கியிருந்தார் ஜான் நீலி. அதுவரை  டச்சு மொழியை மட்டுமே அறிந்திருந்தார் இஸபெல்லா. ஜான் நீலிக்கு ஓரளவு டச்சு புரியும். அவர் மனைவிக்கோஆங்கிலம் தவிர வேறு மொழி  தெரியாது. மொழி தெரியாமல் அவர்கள் சொல்வது புரியாமல் தத்தளித்தார் இஸபெல்லா. தவறான புரிதல் அவருக்குக் கடுமையான தண்டனைகளைப்  பெற்றுத் தந்தது. குச்சி, கம்பி என்று எதில் வேண்டுமானாலும் அடி விழலாம். சின்னஞ்சிறு இஸபெல்லா மிகவும் சோர்ந்து போனார். அம்மா சொன்ன  கடவுளைத் தவிர அவருக்கு ஆறுதல் தேட வேறு வழியில்லை.

4 ஆண்டுகளில் நான்காவது உரிமையாளருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தார் இஸபெல்லா. இப்போதைய உரிமையாளர் ஜான் டுமண்ட் கனிவாக  நடந்துகொண்டாலும் அவரது மனைவி வழக்கமான கொடுமைக்கார உரிமையாளராகவே இருந்தார். இஸபெல்லாவின் வாழ்க்கை மேலும் மேலும்  சிக்கலானது. ஆனாலும், 5 ஆண்டுகளுக்கு மேலாக அங்கேயே வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது பக்கத்துப் பண்ணையில் வேலை  செய்துகொண்டிருந்த ராபர்ட் என்ற அடிமையின் நட்பு கிடைத்தது. இருவரும் காதலித்தனர். ஒரு குழந்தைக்கும் தாயானார் இஸபெல்லா. இந்த உறவு  ராபர்ட்டின் உரிமையாளருக்குப் பிடிக்கவில்லை. இருவரும் பிரிக்கப்பட்டனர். விரைவில் படுகாயங்களுடன் ராபர்ட் இறந்து போன செய்தி மட்டும்  இஸபெல்லாவை வந்தடைந்தது.

ஜான் டுமண்ட் கட்டாயப்படுத்தி தாமஸ் என்ற அடிமைக்கு இஸபெல்லாவைத் திருமணம் செய்து வைத்தார். வயதான தாமஸுக்கு ஏற்கெனவே  இரண்டு மனைவி, குழந்தைகள். அத்தனை பேரும் விற்கப்பட்டிருந்தனர். தாமஸ்-இஸபெல்லா தம்பதிக்கு வரிசையாக 4 குழந்தைகள் பிறந்தன. 1799ம் ஆண்டே அடிமைகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் அது அமல்படுத்தப்படவில்லை. கொடுமைகளைத் தாங்க முடியாத  இஸபெல்லா, 1826ம் ஆண்டு கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு ஓடினார். ஐசாக் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். டுமண்ட்  அங்கும் தேடி வந்தார். ஐசாக் அவர் சொல்லும் விலைக்கு இஸபெல்லாவை வாங்கிக்கொண்டார்.

அப்போது இன்னொரு செய்தி இஸபெல்லாவுக்கு வந்து சேர்ந்தது. 5 வயதே ஆன மகன் பீட்டரை டுமண்ட் சட்ட விரோதமாக விற்பனை செய்திருந்தார்.  ஐசாக் தம்பதியின் உதவியுடன் நீதிமன்றத்துக்குப் போனார் இஸபெல்லா. பல மாதப் போராட்டத்துக்குப் பிறகு பீட்டரை மீட்டு வந்தார். ஓர்  அமெரிக்கருக்கு எதிராக நீதிமன்றம் சென்று, வெற்றி பெற்ற முதல் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர் இஸபெல்லாதான்! 1839ம் ஆண்டு பீட்டருக்கு  கப்பலில் வேலை கிடைத்தது. ஓராண்டு வரை 3 கடிதங்கள் அவருக்கு வந்து சேர்ந்தன. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல் திரும்பி வந்தபோது பீட்டரும்  வரவில்லை... அவனைப் பற்றிய செய்தியும் கிடைக்கவில்லை.

கடவுள் நம்பிக்கை தீவிரமடைந்தபோது, பல்வேறு நபர்களின் அறிமுகம் கிடைத்தது. மதம் தொடர்பான கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார்  இஸபெல்லா. 1843ம் ஆண்டு தன்னுடைய பெயரை சோஜோர்னர் ட்ரூத் என்று மாற்றிக்கொண்டார். 1844ம் ஆண்டு அடிமைகளுக்கான ஓர் அமைப்பு  உருவானது. கல்வி, வேலை என்று அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்கள் சொந்தக் காலில் நிற்கும் விதத்தில் பல விஷயங்கள் அங்கே செய்யப்பட்டன.  வில்லியம் லயோட் ஹாரிசன், ஃப்ரெடரிக் டக்ளஸ், டேவிட் ரக்ளஸ் போன்ற தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு சோஜோர்னருக்குக் கிடைத்தது.

இரண்டே ஆண்டுகளில் அந்த அமைப்பு தடை செய்யப்பட, சோஜோர்னர் வீட்டுப் பராமரிப்பு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.அடிமை ஒழிப்பு  போராட்டங்கள், பெண்ணுரிமைப் போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்றார். டச்சு கலந்த ஆங்கிலத்தில் அவரது பேச்சும் செயல்பாடும் பலரை  உத்வேகம் கொள்ள வைத்தது. 1851ம் ஆண்டு ஓஹியோவில் நடைபெற்ற பெண்கள் கருத்தரங்கில் சோஜோர்னர் கலந்துகொண்டார். திட்டமிடாமல்  திடீரென உரை நிகழ்த்தினார். அவரது நெகிழ்ச்சியான, பிரமாதமான உரையைக் கேட்டு அரங்கமே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனது. தொடர்ந்து பல  கூட்டங்களில் பேசினார்.

அவருடைய பேச்சுகள் பத்திரிகைகளில் வெளியாயின.உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்தது. அப்போது ‘யூனியன் ஆர்மி’யில் இருந்த அமெரிக்க  வாழ் ஆப்பிரிக்கர்களுக்கு ஆதரவாக உணவுகளையும் துணிகளையும் சேகரித்துக் கொடுத்தார் சோஜோர்னர். வாஷிங்டன் டி.சி. சென்ற சோஜோர்னர்,  வெள்ளை மாளிகையில் அதிபர் ஆபிரகாம் லிங்கனைச் சந்தித்தார். அவரிடம் தன்னுடைய கருத்துகளை எடுத்துரைத்தார்.திரும்பி வந்தவர், முன்னாள்  அடிமைகளுக்கு அரசாங்கம் நிலம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் சுயசார்புடன் இயங்க வேண்டும் என்றும் போராடினார்.

தன் வாழ்க்கையின் இறுதி வரை பெண்ணுரிமை, சிறை சீர்திருத்தம், மரண தண்டனை எதிர்ப்பு என்று பல்வேறு விஷயங்களில் போராட்டங்களை  மேற்கொண்டார் சோஜோர்னர். அவர் மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கு உரிமைகள் கிடைத்தன. அடிமையாகப் பிறந்து, அடிமையாக  வாழ்ந்த சோஜோர்னர் ட்ரூத், 1883 நவம்பர் 26 அன்று விடுதலைப் பெற்ற மனுஷியாக மறைந்தார். போராட்டம் ஒன்றே விடியலுக்கான வழி என்று  நம்பி, வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டிருந்த சோஜோர்னர் ட்ரூத், பின்னர் வந்த பெண் போராட்டக்காரர்களின் முன்னோடி!



No comments:

Post a Comment