Saturday, July 30, 2016

மகா ஸ்வேதாதேவி - பெண்ணியத்தின் நிஐ அடையாளம்

பெண்ணியம்...இதன் அர்த்தம் இங்கே பெண்களுக்கே சரியாகத் தெரியாது.  உண்மையில், எது பெண்ணியம் என்பதை தன்னுடைய பேனாவால் சரியாகப் பதிவு செய்த ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், நம்மிடையே இருந்தார். அவர்தான் ‘மகா ஸ்வேதாதேவி’. மேற்கு வங்காளத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மகா ஸ்வேதாதேவி,  பெண்பால் எழுத்தாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர். அடித்தட்டு மக்களின் உணர்வுபூர்வமான போராட்டங்களை ஒன்றுவிடாமல் பதிவு செய்த நட்சத்திர எழுத்தாளர்... வார்த்தைகளின் நாயகி... சமூக நல சேவையாளர்.






’பல மில்லியன் நிலவுகள் கடந்து போயின. பல மில்லியன் கிரகண வருடங்கள் கடந்து போயின. பல கோடி ஒளி ஆண்டுகளுக்குப் பின்பு, அவளுடைய கண்கள் திறந்தன. திரவுபதி, வானத்தையும், நிலவையும் பார்த்தாள். அவளுடைய அடிவயிற்றில், ஏதோ ஒன்று பாராங்கல்லாய் கனத்தது. அவளுடைய கால்களுக்கு அடியில் பிசுபிசுப்பான ரத்தம்' -  தன்னுடைய கதையான 'திரவுபதி' யில் ஸ்வேதாதேவி வடித்திருந்தது, ஒருத்தியின் வேதனையை அல்ல. சமூகக் கட்டமைப்புகளாலும், பாலியல் சிந்தாந்தங்களாலும் உடல் சிதைக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் வலியையும்தான்.
''பெண்ணியம் என்பது, சுயம் சார்ந்த பிரச்னைகளைப் பார்வையிடுவதல்ல. நம்மைச் சுற்றி அடிமட்ட நிலையில் போராடும் பெண்களுக்கான உரிமைகளை மீட்டுக் கொடுப்பது. ஆதிவாசிகளாகவும், பூர்வகுடிக்களாகவும், வாழ்வின் எளிய நிலையிலும் இருக்கும் பெண்கள் எத்தனையோ சோதனைகளைக் கடந்தும், இன்றும் தங்களுடைய வாழ்வாதாரத்தினைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றார்களே, அதுதான் பெண்ணியம்'' என்று தனது உள்ளத்திலிருந்து வெளியான ஒவ்வொரு எழுத்திலும் பதிவு செய்தவர் மகா ஸ்வேதா தேவி. எழுத்தின் ராணியாக வலம் வந்த, இந்தியாவின் உயரிய ஞானபீட விருது உள்ளிட்ட பல்வேறு வாழ்நாள் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான மகா ஸ்வேதாதேவி,  இன்று நம்மிடையே இல்லை.

தன் 90வது வயதில்,  கடந்த ஜூலை 28 ம் தேதியன்று, தன்னுடைய எழுத்துக்களுடன் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார் மகா ஸ்வேதா தேவி. மேற்கு வங்காளத்தில், பூர்வக்குடிகளாய் சிக்கி துயரில் வீழ்ந்து கதறிய மக்களுக்காக, வாழ்நாள் முழுவதும் போராட்டத்தினை விதைத்தவர். எழுத்தாளுமைகளும், கவிஞர்களும் நிறைந்த குடும்பத்திலிருந்த வந்தவர். 1940களில் கம்யூனிச சிந்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட மகாஸ்வேதாதேவி, வறுமையிலும், அத்தியாவசிய தேவைகளைக் கூடப் பெற முடியாமல் தவித்த மேற்கு வங்கத்தின் தென்னகப் பகுதிகளில் வசித்து வந்த ஆதிவாசிப் பழங்குடியினரின் நலனுக்காக பாடுபட ஆரம்பித்தார்.




தன்னுடைய நிஜ வாழ்க்கையில், கண்டுகொண்ட எளிய மனிதர்களின் வலிகளை, கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய புத்தகங்களில் கதை மாந்தர்களாக வடித்து, அவர்களுடைய வலியையும், வேதனையையும் பதிவு செய்தார் ஸ்வேதா தேவி. வாழ்க்கையில் கடந்து போகும் ஒவ்வொரு சம்பவத்தையும், வார்த்தைகளில் அப்படியே குணம் மாறாமல் வெளிப்படுத்தத் தெரிந்த மகத்தான எழுத்தாளுமைகளில் மகா ஸ்வேதாதேவியும் ஒருவர்.
அவருடைய துணிச்சலான படைப்பாக்கங்களில் ஒன்று, ‘மார்பகங்களின் கதை' (breast story). இப்படியெல்லாம் கூட பெண்களின் மீதான சுமைகள் இருக்கக் கூடுமா என்று வலியை இதயத்தின் உள்ளூடே இறக்கும் கதைகள் இந்தப் புத்தகத்தில் ஸ்வேதாதேவியால் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் எல்லாக் கதைகளுமே பெண்களின் மார்பகங்கள் மீதான சமூகத்தின் கேலிக்கூத்தான பார்வையை கட்டமைப்பதாக அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள  ‘மார்பகம் கொடுப்பவள்’ (breast giver), என்ற கதையின் நாயகி, குடும்பத்தின் வறுமைச் சூழலால் பல வருடங்கள் செவிலித் தாயாக இருந்து பல குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்த்து, ஒருநாள் மார்பகப் புற்றுநோயால் இறந்து போகும் ஜசோதாவின் கதை இது. உடலாலும், மனதாலும் களைத்துப்போன ஒரு பெண்ணின் கதையான இது ஒருநிமிடமேனும் நம்மை உள்ளம் குலைய வைக்கும்.

’என்னுடைய கத்தியால் கீறப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் மனித உரிமைகளுக்காகவும், மனிதர்களுக்குமானது. எழுத்து என்னுடைய உண்மையான உலகம். அதில்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்’ மகா ஸ்வேதாதேவின் வாழ்நாள் வாசகங்கள் இவைதான்.
இப்போதும் அவர் தன்னுடைய வலிமை நிறைந்த படைப்புகளால், நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கத்தான் போகின்றார். ஒரு நூற்றாண்டின் உணர்வுகளாக, தலைமுறைகளின் குரலாக நம்மிடையே நிலைத்து நிற்கப் போகும் மகா ஸ்வேதாதேவி, ’கனவென்பது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமை...அதை யாராலும் பறிக்க முடியாது’ என்பதை இலக்கிய உலகில், புரட்சி செய்ய நினைக்கும் ஒவ்வொரு எளியவர்களுக்கும் நினைவூட்டிக் கொண்டே இருப்பார்.!


- ப.விஜயலக்‌ஷ்மி
உத்திரபிரதேசம் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை அரங்கேற்றுவதில் பெயர்போன மாநிலம். உ.பி. மெயின்புரியில் ரூ. 15 கடன் பாக்கி வைத்ததற்காக தலித் தம்பதியை ஒரு வெறிபிடித்த கடைக்காரர் கோடாலியால் வெட்டிக் கொன்றிருக்கிறார்.
 விவசாயக் கூலிகளாகப் பணிபுரியும் தலித் தம்பதி, வெறும் ஐந்து ரூபாயை வைத்துக்கொண்டு பணிக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த ஐந்து ரூபாய் ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கொண்டிருப்பதை பார்த்த,கடைக்காரர் நேற்று வாங்கிய பொருட்களுக்காக ரூ. 15 தரவேண்டுமே அதைக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதைத் தந்துவிடுகிறோம் பொறுத்துக்கொள்ளுங்கள் என சொன்ன தம்பதியை கீழ்த்தரமான வார்த்தைகளால் வாட்டியிருக்கிறார் கடைக்காரர் மிஸ்ரா. தம்பதி அப்படி பேச வேண்டாம் எனக் கூறியதைப் பொறுக்க முடியாமல், வீட்டிலிருந்த கோடாலியைக் கொண்டுவந்து அவர்களைத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தம்பதி இறந்தவிட்டனர்.
 குடிசையில் வசிக்கும் அந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும் மூன்று மகன்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மூன்று மகன்களும் முறையே 15, 13, 8 வயதுடையவர்கள். இவர்கள் அனாதரவாக நிற்கின்றனர்.
 “வாங்கிய பிஸ்கெட்டை உறைகளைப் பிரிக்கும் முன்பே என் பெற்றோர் கொல்லப்பட்டுள்ளனர். என்னுடைய மூன்று தம்பிகளை வைத்து காப்பாற்றும் அளவுக்கு என்னுடைய வாழ்க்கை இல்லை. நாங்கள் உழைப்பது எங்களுடைய வயிற்றுப் பாட்டுக்கே போதுமானதாக இல்லை” என்கிறார் கொல்லப்பட்ட தம்பதியின் இரண்டாவது மகள் மிலன்.
 மாநில அரசு ரூ. 5 லட்சம் உதவித்தொகை அறிவித்துள்ள நிலையில், எப்போது அவர்களுடைய கைகளில் சேரும், அதுவரை அந்தச் சிறுவர்களின் நிலை என்னாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கோமாதா புத்திரர்கள் சுமக்கட்டும்!’’...................
 மத்திய பிரதேசத்தில் மண்டசூர் என்னும் ஊரில் ரயில் நிலையத்தில் வீட்டு உபயோகத்திற்காக இறைச்சி வாங்கிவந்த இஸ்லாமியப் பெண்களை கவுரக்ஷா தள் அமைப்பினர் கடுமையாக தாக்கினர். தாக்கியது மட்டுமல்லாமல் இந்த நிகழ்வை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் இனி பசுவைக் கொல்ல நினைத்தால் கூட அவர்களுக்கும் இந்த நிலைதான் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
 வன்முறை நடந்தபோது வேடிக்கை பார்த்த காவல்துறையினரின் செயலும் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதை வேடிக்கை பார்த்த பொதுமக்களும் தடுக்க முயலாமல் கைப்பேசியில் படம் எடுத்தபடி இருந்தனர். காவல்துறையினரோ அரை குறை மனதுடன் தாக்கியவர்களை விலக்கி விட முயற்சித்தனர். ஆனால், பல சமயங்களில் அவர்கள் வேடிக்கை பார்த்தபடியே நின்றிருந்தனர்.
 இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அந்தப் பெண்களை காலால் உதைத்தும், கையால் அடித்தும், கன்னத்தில் அறைந்தும் மோசமாக நடந்து கொண்டது. இதற்கு சற்று முன்னதாக காவல்துறையினருக்கு சிலர் பசு கறியுடன் வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் வந்தனர். அந்த சமயத்தில்தான் அப்பெண்கள் இருவரும் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
 தாக்கப்பட்டவர்களையே காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது. அப்போதும்கூட அக்கும்பல் அப்பெண்களை தொடர்ந்து விடாமல் தாக்கியபடியே சென்றனராம்.
தாக்குதல் நடத்திய கும்பல் புனித கோமாதாவுக்கு ஜே என்று வாழ்த்தி முழக்கம் போட்டனர். அவர்கள் தாக்கியதில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த வன்முறை தாக்குதல் நடந்தது.
பின்னர் காவல்துறையினர் கூறுகையில், இவர்கள் பசுவின் கறியைக் கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது; இதையடுத்து நாங்கள் அவர்களைக் கைது செய்து இறைச்சியைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினோம். சோதனையில் அது எருமை மாட்டின் இறைச்சி என்று தெரிய வந்துள்ளது என்றனர்.
 இருப்பினும் இரு பெண்கள் மீதும் காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனராம். இது தொடர்பாக சமுக வலைதளத்தில் கவு ரக்ஷா தள் அமைப்பினர் இந்த தாக்குதல் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்றை எழுதியுள்ளனர்.
 அதில் இனி பசுவைக் கொல்ல மனதால் நினைப்பவர்களுக்கும் இதே தண்டனைதான்; அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி என்று எழுதியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் கூறும் போது பொதுமக்களின் கோபம் நியாமானதே!
 பசுவை அவர்கள் தாயாக மதிக்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர். இருப்பினும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
வட மாநிலங்கள் முழுவதும் சங் பரிவார்களின் போக்கு பாசிசத்தின் உச்சத்தில் நிர்வாண ஆட்டம் போடுகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? அரசமைப்புச் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா? தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற தறுதலைத்தனம், தலைக்கனம் தாண்டவம் ஆடுகிறது. நாடாளுமன்றத் தில் தட்டிக் கேட்ட மேனாள் முதலமைச்சரையே (மாயாவதியை) தரக்குறைவாக ஆளும் பி.ஜே.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் நாக்கில் நரம்பின்றி ஏசித் தீர்க்கிறார்.
இதைவிட இன்னும் மோசமான, கேவலமான நிகழ்வுகள் நாட்டில் நடந்தாலும் இந்தியாவின் பிரதமர் கண்டு கொள்ளவே மாட்டார் - உள்துறை அமைச்சரும் வாய்த் திறக்க மாட்டார்.
 குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ‘செத்த மாட்டைத் தூக்கமாட்டோம் - கோமாதா புத்திரர்களே - உங்கள் மாதாவை நீங்களே தூக்குங்கள் - சுமந்து சொல்லுங்கள்!’ என்று கூறிச் சென்றனரே - அந்த நிலைதான் இந்த இந்துத்துவாவாதிகளைக் கொஞ்சம் கீழே இறங்கி வரச் செய்யும்.
நாடு முழுவதும் இந்த நிலை தொடரட்டும், தொடரட்டும்!
 அப்பொழுதுதான் ஆதிக்க வெறியர்கள் இறங்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!

Friday, July 29, 2016

மனிதம் மறந்த கல்வி

கடந்த, 1990களில் ஆரம்பித்த தகவல் தொழில்நுட்ப புரட்சி, நம் கல்வித் திட்டத்தை மறு சீரமைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. தகவல் தொழில் துறை இன்று மிகப் பிரமாண்டமாக உருவெடுத்து, அனைத்துத் துறைகளிலும் காலுான்றி இன்றியமையாத சக்தியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. கல்வித் துறையும் இதற்கு ஓர் விதி விலக்கல்ல.
கல்வி என்றால் அது தகவல் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருந்தால் மட்டுமே சிறக்க முடியும் என்ற கருத்தும் இன்று சமுதாயத்தில் வளர்ந்து, வேரூன்றி இருப்பதும் வருந்தத்தக்க ஓர் நிகழ்வேயாகும். மனிதநேயம், அடிப்படை அறிவியல், கலை, பண்பாடு, மொழியியல் மற்றும் இலக்கியம் சார்ந்த புலன்களில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையும் இதற்குச் சரியான ஓர் எடுத்துக்காட்டு. தொழில் நுட்ப வளர்ச்சி துவங்கி, 20 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், சமுதாயத்திற்கும், மானுடத்திற்கும் கல்வித்துறை மூலமாக இதனால் என்ன பயன் கிட்டியது என்பது போன்ற பல வினாக்கள் இன்று எழுப்பப்படுகின்றன.
இந்த சூழலில் கல்வித்துறை தன்னை மேம்படுத்திக் கொண்டதா என்ற கேள்வியும் ஒருபுறம் எழுகிறது.தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் அடைந்த நற்பலன் என்பன ஒருபுறம் இருந்தாலும், கல்வித் துறையும், இந்த தலைமுறையும் எதையோ இழந்து விட்டது போன்ற ஓர் நெருடல் இருப்பது ஒருவகையில் உண்மையே எனலாம்.
விவாதிப்போம்... ஏனெனில், சுயபரிசோதனைக்கு இதுவே மிகச் சரியான நேரம். கல்விச்சாலைகள் இன்று தெளிவான லாப நோக்கத்துடனேயே துவங்கப்படுகின்றன. தொழிற் கல்வியின் தேவை ஒருபுறம் இருந்தாலும், மேற்கூறிய கலை மற்றும் இலக்கியத் துறைகள் பின்னடைவு அடைந்திருப்பது நிச்சயமாக ஒரு நல்ல அடையாளம் அல்ல. அரசு பள்ளிகளிலும் இன்று தொழிற் கல்விக்குக் கிடைக்கும் முக்கியத்துவம், தாய் மொழி பயில்தலுக்குக் கிட்டாதது மிகவும் வருந்தத்தக்க நிலை. இதற்கான காரணம் எதுவென ஆராயும் போது, பெற்றோரின் ஆங்கில மோகமும், தங்கள் பிள்ளைகள் தொழில் அல்லது மருத்துவத்துறையில் புகுந்து பெரும்பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆசை (பேராசை)யும் தான் மூலகாரணங்கள் எனலாம்.
தனிப்பட்ட எந்த ஒரு மனிதனும் தன் குடும்பம் மற்றும் பிள்ளைகள் குறித்து தன்னுடைய குறிக்கோள்களை வகுத்துக் கொள்வது இயல்பு தான். ஆனால், தமிழ் மாந்தர் யாவரும் இதே நோக்கில் பயணிக்க ஆரம்பித்தால், இவ்வுலகிலேயே மிகத் தொன்மையான மொழியாம் நம் தமிழ் மொழி மற்றும் அது சார்ந்த கலாசாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை கற்பவர் யார், கற்பிப்பவர் யார்? நம் இலக்கியங்களில் புதைந்து இருக்கும் உன்னத கூற்றுக்களையும், ஆழ்ந்த சிந்தனைகளையும் இந்த தலைமுறை பயில்வது இனி எக்காலம்?
இந்தக் கூற்றைப் படிப்பவர்கள், இது ஏதோ வெறும் ஒரு மொழி வெறி பிதற்றல் என்று கூட முடிவு செய்யலாம். ஆனால் இன்றைய நிகழ்வுகள் இந்த பிதற்றலிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்த்தும். தொழில் மற்றும் தொழில் நுட்பம் வளர்ந்து என்ன பயனை நாம் கண்டு விட்டோம்? புலம் பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைக் காண்கிறோம்.
புலம் பெயரும் நோக்கத்தில் தொழிற்கல்வி கற்பவர்கள் பெரும்பாலும் தங்கள் இணக்கத்தை பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு அர்ப்பணிக்கின்றனரேயன்றி இந்த நாட்டுக்கோ, தங்கள் மொழிக்கோ, தங்கள் நன்றியுணர்வை காட்டுவது இன்று குறைந்து வருகிறது.
தொழிற் கல்வி வளர்ச்சி, மதிப்புக் கல்வியின் அவசியத்தை குறைத்து விட்டது என்பதை யாரும் மறுக்க இயலாத உண்மை. இதோடு புதைந்து போனது, மானுடமும், மொழி நேயமும் தான்.
தொழில் நுட்ப பள்ளி மாணவர்களின் கைகளில் உள்ள மடிக்கணினி அல்லது அலைபேசியில் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும், கையடக்கத்தில் கொண்டு சேர்க்கும் தன்மை வாய்ந்தது.மாணவன் ஒருவன் அலைபேசியில் நீலப் படம் பார்த்து கொண்டு இருந்த போது சிலிப்புற்று, எதிரே வந்த பிஞ்சு மாணவி ஒருத்தியை சிதைத்தது, இன்றைய நாளின் கொடுமை.
காதலை ஏற்க மறுத்த பெண்ணின் முகத்தில் அமிலம் வீசும் கொடுமை கள் அதிகரித்து வருவதும், இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சியதின் காலகட்டத்தில் தான்.
தாய், தந்தையர் மீதுள்ள பாசமும், பெரியவர்கள் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்து, பெருநகரங்களில் புற்றீசல் போல் வளர்ந்து வரும் மூத்த குடிமக்களுக்கான காப்பகங்களும் இன்றைய தலைமுறையின் சகிப்பு தன்மையற்ற, நன்னடத்தையற்ற வாழ்க்கை முறைக்கான உதாரணங்களில் ஒன்று. பணம் ஒன்றே வாழ்க்கை என்ற இலக்கு நோக்கி பயணம் செய்யும் போது, பாசத்திற்கும், மானுடத்திற்கும், மனித நேயத்திற்கும் இங்கே என்ன வேலை என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
தவறு என்பது இங்கே, இந்நாளில் துவங்கியது அல்ல! பெற்றோரின் பேராசையில், சிறு வயது முதல் பள்ளிகளில் நாம் புகுத்திய ஆங்கில மோகத்தாலும், தொழிற் கல்விக்கு நாம் கொடுத்த முக்கியத்துவத்தாலும், அதன் பொருட்டு அழிந்து போன மானுடம், மனிதநேயம் மற்றும் மதிப்பு சார் கல்வியும் காரணிகளாக இருக்கலாம்.
மறைந்து வரும் நம் பண்டைய இலக்கியங்களில் புதைந்திருக்கும் சகோதரத்துவம், மனிதநேயம், ஒழுக்கம், அன்பு, அருள் போன்ற உயரிய சிந்தனைகள் தற்காலத் தலைமுறைக்கு சென்று அடைய வேண்டிய காலம் கடந்து போய் கொண்டிருக்கிறது.நாம் விழித்துக் கொள்ள இதுவே சரியான தருணம். இனியும் காலம் தாழ்த்தாது செயல்படத் துவங்கிடுவோம். இதனால் நாம் தொழிற் கல்விக்கு எதிரானவர் என்று கொள்ள வேண்டாம்! தொழிற் கல்வியும் வேண்டும் தான்; அதனுடன் நம் தமிழ் இலக்கியங்களுக்கான உரிய மாண்பும், மரியாதையும் அளிக்கவும் பயிற்றுவிக்க வேண்டும். மானுடமும், தமிழினமும் தழைக்க வேண்டுமென இன்றே துவங்கிடவும் வேண்டும்.
வாழிய மானிடம் ! வாழிய தமிழ்மொழி!


ப.ராம் மோகன்,
எழுத்தாளர், துணை ஆணையர்,
மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை
இ-மெயில்: prmohan1969@yahoo.co.in

நன்றி:www.dinamalar.com

Thursday, July 28, 2016

மன்ஜி-சிறந்த முயற்சி

மன்ஜி" ஹிந்தி திரைப்படம்.
 -செ. நிருபன் சக்ரவர்த்தி.
 இது பீகாரை சேர்ந்த தஸ்ராத் மன்ஜி என்பரின் வாழ்கை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது .
 திரைப்படத்தில் ஒரு தலீத்தாக நடித்து , கதைக்கு உயிர் கொடுத்த நடிகர் நவாசுதீன் சித்திக் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தே ஆகவேண்டும் .
 திரைபடத்தில் காதலுக்கும் , நகைக்சுவைகும் பஞ்சமே இல்லை .
 பொதுவாக தலீத்கள் பற்றி திரைப்படங்கள் வருவதே அரிது. ஏன்னெனில், தலீத்கள் இன்னும் முழுமையாக சினிமாக துறைக்குள் நுழையவில்லை . அதனால் முதலில் திரைபடத்தின் இயக்குனர் கேட்டன் மேத்தா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தே ஆகவேண்டும் .
 திரைப்படம் , ஒரு கணவன் அவனது மனைவி மீது வைத்த காதலின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளது.
 திரைப்படம் தலீத் மக்களின் இன்னல்களையும் , ஆதிக்க சாதியிரினரின் அரக்க குணத்தை தெளிவாக திரையிட்டு காண்பித்துள்ளது.
 திரைப்பட தொடக்கத்தில் , ஒரு தலீத் இந்தியர் செருப்பு அணிந்து சென்ற குற்றத்திற்க்காக , அவரின் கால் பாதத்தில் லாடம் கட்டும் தண்டனை என , தலீத் பெண் கற்பழிப்பு வரை ஆதிக்க சாதிவெறியை திரைப்படம் தெளிவாக காண்பித்துள்ளது.
 டாக்டர் . திரு .அம்பேத்கார் அவர்கள் போராடி சாதி கொடுமையிலிருந்து தலீத்களை மீட்க உருவாகிய சமத்துவ சட்டம் அமலுக்கு வந்த நாளை தலீத் மக்கள் கொண்டுவது , ஒரு உண்மையான தலீதுக்கு திரைப்படம் கவின் மிகு காட்சியாக அமைந்திருகிறது .
 தலீத் நக்சலைட்கள் உருவாக்கி , மக்களின் உழைப்பை சுரண்டும் ஆதிக்க சாதி நிலசுவான்தரை தூக்கிலேற்றுவது என ஆயுத புரட்சியின் வடிவத்தை திரைப்படம் செம்மையாக வடிவமைத்துள்ளது .
 திரைபடத்தின் மைய கதை என்னவெனில் ,
 மன்ஜியின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக மலையை கடந்து வயலுக்கு செல்லும் போது , தவறி விழுந்து இறந்துவிடுகிறார் . இதனால் மன்ஜி கோவம் கொண்டு , சுமார் முப்பது வருடத்திற்கும் மேலாக தனிவருவனாக அவ்வளவு பெரிய மலையையே உடைத்து சாலை அமைக்கிறார் . தனது மனைவிக்கு ஏற்பட்ட நிலை இனி எவருக்கும் உருவாக கூடாது என லட்சியத்தோடு பல ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை கடந்து செய்து முடிக்கிறார் . ஒரு தன்னம்பிக்கை திரைப்படம் .

பெண்ணின் கற்பெனும் மடமை:
கற்பு கற்பு.... என சொல்லி பெண்களை முட்டாளாக்கும் மாய வலையை தமிழ் சினிமாக்கள் எப்போதும் விரித்துக்கொண்டே இருக்கும்.
 நான் அடிகடி சினிமாக்களை உதாரணமாக சொல்ல காரணம்... சினிமா என்பது ஒரு இலக்கியத்தின் தோன்றல், பாமரனைகூட அரசியல் பேச வைத்துவிடும்.
 சினிமாக்களில் பழைய படங்களில் , ஒரு பெண் ஒரு கயவனால் கற்பழிக்கப்பட்டால் , அடுத்த காட்சியே அந்த இயக்குனரின் படைப்பில் அவள் தன்னை தானே குத்திக்கொண்டு இறந்து விடுவாள் அல்லது அவள் தற்கொலைக்கு முயன்று நாயகனால் காப்பாற்றபட்டு மீண்டும் அந்த கயவனுக்கே திருமணம் செய்து வைக்கப்படுவாள். இது பெண்ணடிமையின் முதல் ஃபார்முலா.
 எதார்த்தத்தில் கற்பு என்பது , உடலுக்கு அப்பார்பட்டது. கற்பு என்பது மனத்தின் எண்ணவோட்டத்தின் பிரதிபளிப்பு.
 சிலரால் கொடூரமான முறையில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் வாழ்கை அத்தோடு முடிந்ததா என்ன!
 அதில் அவள் செய்த தவறு என்ன?
 இன்று இணைய தளத்தில் பெண்கள், அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மலம் கழிப்பதை , சிறுநீர் கழிப்பதை , குளிப்பதை படமெடுத்து விட்டுவிடுகிறார்கள். இதனால் அந்த பெண்ணின் கற்பு போய் விட்டதா...! வாழ்வே முடிந்து விட்டதா... ?
 கற்புக்கு விளக்கம் புரியாதவர்கள் , பெண்களின் உடலில் இன்னும் கற்பை தேடிக்கொண்டே தான் இருக்கிறார்.
 வெறும் பெண்ணின்உடல் இணையத்தில் சுற்றுவதால் கற்பு போய்விட்டது என நான் கருதியிட்டதே இல்லை.
 மிருக பிறப்பை வழியாக கொண்ட நாம் , ஆடையை போட்டுக்கொண்டே சீதோசன பாதுகாப்பு வேண்டியே.,
 அதனால் ஒரு ஆடு , மாடு களின் நிர்வாண உடலை பார்க்கும் போது எப்படி தோன்றுகிறதோ அதே படைப்பில் தான், மனித இனமாகிய நாமும்.
 இணையதளத்தில் வளம் வரும்அப்பாவி பெண்களே , கலங்காதீர் ... உங்கள் உடல் மட்டுமே தெரிகிறது. உங்கள் கற்பு இன்னும் கலங்கபடவில்லை. தற்கொலைக்கு செல்லாதீர்.
 உங்களை படமெடுத்து மிரட்டும் ஆண்மையற்றவனை கண்டு அஞ்சாதீர். அவனுக்கு இனங்காதீர். எதிர்த்து நில்லுங்கள். அவனை துரத்தி அடியுங்கள்.
 உங்கள் கற்பை உணரும் ஆண்மகன் , நிச்சயம் சாதாரண ஆண்களை போல அல்லாமல் , ஆழத்தில் எடுத்த முத்தை போல உளவியல் சிந்தனை பெற்றவனாக இருப்பான்.