Friday, August 12, 2016

டெல்லியில் மரித்தது மாதிபுல் இல்லை... மனிதநேயம்தான்!




டெல்லியில்,  சாலையில் சென்றவர் மீது நேற்று அதிகாலையில் டெம்போ வேன் ஒன்று மோதியது. சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை பார்த்து விட்டு உதவாமல், அந்த டெம்போ டிரைவர் தப்பி ஓடி விட்டார். சுமார் 90 நிமிடங்கள் வரை அந்த மனிதர் சாலையிலேயே உயிருக்கு போராடிக் கொண்டு கிடக்கிறார். அவரைக் கடந்து சென்ற யாருக்கும் உதவி செய்ய வேண்டுமென்ற மனம் வரவில்லை. ஏன் அருகே கூட யாரும் வரவில்லை. ஒரே ஒரு மனிதர் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவரின் அருகில் வருகிறார். 'இவராவது உதவ வருகிறாறே... ' என்று நினைத்தால், அவரோ, உயிருக்கு போராடிய மனிதரிடம் இருந்து செல்போனை திருடி விட்டு ஓடி விடுகிறார்.






இத்தகைய மனிதத் தன்மையற்ற செயல் டெல்லியில் நேற்று நடந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவான நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
டெல்லி சுபாஷ் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதிபுல்லுக்குதான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. மாதிபுல் காயமடைந்து ஒன்றரை மணி நேரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, 140 கார்கள், 82 இரு சக்கர வாகனங்கள், 182 மோட்டார் சைக்கிள்கள், 45 பாதசாரிகள் அவரை பார்த்துவிட்டு, கடந்து சென்றுள்ளனர். குறைந்த பட்சம் ஆம்புலன்சுக்கு  தகவல் தெரிவிக்கக் கூட அவர்களுக்கு மனம் வரவில்லை. கடைசியில் அதே இடத்தில் மாதிபுல் மரித்தும் போய் விட்டார்.
 உயிரிழந்த மாதிபுல், 4 குழந்தைகளின் தந்தை. கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இரவில் ஒரு வேலை. பகலில் ஒரு வேலை பார்த்து வந்துள்ளார். காலையில் ஆட்டோ ஓட்டியும் இரவில் வாட்ச்மேன் பணியும் பார்த்து வந்துள்ளார். வாட்ச்மேன் பணி முடிந்து நேற்று அதிகாலை 5.40 மணியளவில் வீட்டுக்கு போய்க் கொண்டிருக்கும்போதுதான் அவர் மீது டெம்போ மோதி உள்ளது. அந்த இடத்திலேயே சாலையில் சரிந்து விழுகிறார். டெம்போ டிரைவர், இறங்கி சற்று தூரமாகவே அவரை பார்த்துவிட்டு, தனது வாகனத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை பார்த்துவிட்டு, வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு போய் விடுகிறார்.
 சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, போலீசார் தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்கு முன்னரே, மாதிபுல் இறந்து விட்டார். மரித்தது மாதிபுல் இல்லை... மனித நேயம்தான்

Thursday, August 4, 2016

யார் இந்த ஜக்கி வாசுதேவ் ?
 ஈஷா யோகாவும் உடைக்கப்படும் சிறகுகளும் இதன் துவக்கப் புள்ளி எதுவென்று பார்ப்போம் :-
 தன்னை சத்குரு எனவும், தானே முக்திக்கு வழிகாட்டி எனவும் சொல்லிக்கொள்ளும் இவர் 1957 -ல் தெலுங்கராக மைசூரில் பிறந்தவர், இதை தன்னுடைய மூன்றாவது பிறவி என்று சொல்லிக்கொள்ளும் அவர்,தன் முதல் பிறவியில் பில்வாஸ் என்னும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தேன் என்றும், இரண்டாவது பிறவியில் சத்குரு ஸ்ரீப்ரமா என்ற பெயரில் தேனி அருகில் பிறந்து ஊட்டியில் வாழ்ந்து வெள்ளியங்கிரி மலையில் உயிர் விட்டதாகவும் சொல்லிக்கொள்கிறார்
 தம் மூன்று பிறவியின் நோக்கம் ஒன்றே, அது தியானலிங்கம் கோவில் கட்டுவதே என்றும், அது முடிந்தவுடன் உயிர் துறப்பதாபவும் உறுதி கொடுத்திருந்தார் (அப்பணி முடிந்து 15 ஆண்டுகள் கடந்தும் போனது)
 ஆன்மீக பாதைக்கு துறவற வாழ்க்கைதான் சிறந்தது, குடும்ப வாழ்கை ஒரு சுமையோடு மலை ஏறுவது போல கடினமானது, என்று உலக மக்களுக்கு போதனை செய்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் கோவையில் தன் சேவையை துவங்கும் முன், மைசூரில் ரிஷி பிரபாகர் என்ற யோகா குருவிடம், யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார்
 அங்கு அவர் விஜி என்ற பெண்ணை சந்திக்க நேர்ந்தது, அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர், அவருடன் நெருங்கி பழகியதில் காதல் வயப்பட்டு திருமணமும் செய்துகொண்டார்
 சில நாட்களுக்குப் பிறகு கோவையில் சுதர்சன் வரதராஜ் [இவர் பிரபல ELGI வரதராஜ் அவர்களின் மகன்] என்பவரின் நட்பு இவருக்கு கிடைத்தது ஜக்கி வாசுதேவ் பற்றி அறிந்த அவர் தன் மனைவி பாரதி வரதராஜ் [இவர் ஆந்திர முன்னாள் எம்பி ஒருவரின் மகள்] அவர்களை யோகா வகுப்பிற்கு அனுப்பி வைக்க, அங்கு இவருடன் நெருங்கி பழகிய பாரதி வரதராஜினால் பலமுறை விஜிக்கும் ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கும் மனஷ்தாபங்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது
 பிறகு விஜி தனது “அணாகத்தா” சக்ராவில் இருந்து தனது உயிரை விட்டதாக ஜக்கி வாசுதேவ் கூறுகிறார்
 ஆனால், தனது மகளை ஜக்கி வாசுதேவ் கொன்று விட்டதாகவும், ஆசிரமத்தில் வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் விஜியின் தந்தை காங்கன்னா போலீஸிடம் புகாரும் கொடுத்துள்ளார்
 அதன்பின் பாரதி வரதராஜ் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு ஜக்கி வாசுதேவுடன் ஆன்மீக பணியாற்ற வந்துவிட்டார்
 ராதே :
 விஜிக்கும் ஜக்கி வாசுதேவ்க்கும் பிறந்த குழந்தை தான் ராதே, முக்திக்கு வழிகாட்டி என்று பிறர் வீட்டு பிள்ளைகளுக்கு மொட்டையிட்டு, சாமியாராக்கும் ஜக்கி வாசுதேவ் அவர்களின் செல்ல மகள், டீசர்ட் போட்டுக்கொண்டும் சார்ட்ஸ் போட்டுக்கொண்டும் பப், குடி, கொண்டாட்டம் என வளர்ந்த நவீன காலத்து மங்கை ஒருவேளை “நீங்கள் என்றும் பக்கத்து வீட்டு விவேகானந்தாவையே விரும்புவார்கள் உங்கள் வீட்டில் உருவாக விடமாட்டீர்கள் “என்று ஜக்கி வாசுதேவ் கூறியது உபதேசம் பிறருக்கு மட்டும்தான் போலிருக்கிறது, உபதேசம் என்பதெல்லாம் ஊருக்கு மட்டுமே என்பதற்கு சிறந்த உதாரணம் ஜக்கி வாசுதேவ் மட்டுமே
 சந்நியாசம் :
 ஈஷாவில் சந்நியாசம் எடுக்கிறவர்கள் முதலில் குடும்ப தொடர்பை முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டும் . அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் முதற்கொண்டு அனைத்து ஆவணங்களும் ஈஷா மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் போய்விடும். சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் இருக்கும் சொத்து, நகை, பணம் போன்றவை கூட ஈஷாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள்தான் என்னவென்பது தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அரை போதையில்தான் இவர்கள் இருப்பார்கள்
 18 வயதான பிள்ளைகள் தன் வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்ளும் உரிமையை கொடுக்கும் அதே சட்டம்தான் வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் மேல் நடவடிக்கையும் எடுக்க முடியும் என்று முதியோர் நலச்சட்டத்தின் மூலம் சொல்கிறது
 பாவம், பெற்றமனம் புகார் கொடுக்கவா முற்படும்?
 புரண்டு அழ மட்டுமே தெரியும் அதற்கு
 18 வயதான பிள்ளைகள் தன் சந்நியாசம் போக வேண்டுமா? இல்லை 10 வயதானாலும் போதும், என்னிடம் அனுப்பி வையுங்கள் என்கிறார் ஜக்கி
 வாசுதேவ்
 சம்ஸ்கிருதி:
 இவரால் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கா உருவாக்கப் பட்டதே இந்த சம்ஸ்கிருதி என்ற குருகுலப் பள்ளி இதில் குழந்தைகளை சேர்த்த கட்டணம் 7 லட்சம்,
 இங்கு அதிகாலை 5மணிக்கு எழுந்து, தீர்த்த குண்டம் எனும் குளத்தில் 10-12° குளிர்ந்த நீரில் குளியல், பின்பு யோகா, களரி பயிற்சி, பின் 2-3kms நடை பயிற்சி, பின் மீண்டும் குளியல், அதன்பின் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவு, பின் மீண்டும் இரவு 7 மணிக்கே அடுத்தவேளே உணவு, இடையில் ஒன்றும் கிடையாது
 பிடிக்காமலும், உடல் நலம் குன்றியும் விலகினால் வாங்கிய பணத்தில் பத்து பைசாக்கூட திரும்ப கொடுக்கப்பட மாட்டாது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது
 இது என்ன கொடுமை?
 அந்த வயதில் அந்த பிள்ளைகள் அனுபவிக்க வேண்டிய தண்டனையா இது? இதுதான் குருகுலக் கல்வியா? இதுதான் சந்நியாசமா?
 “குழந்தைகள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு வந்த ஒரு உயிர் மட்டுமே, அவர்களின் மேல் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, நீங்கள் எதையும் கற்றுத்தர முயற்சிக்காதீர் “- ஜக்கி வாசுதேவ்
 அப்படியானால் தாங்கள் செய்துகொண்டிருப்பது என்ன? அவர்களின் மேல் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது இப்படி கொடுமை செய்வதற்கு?
 உங்கள் சுயலாபத்திற்காக பிஞ்சுகளை வதைப்பதேன்?
 இந்த குருகுலம் கற்பிக்கும் பாட்டும், ஆட்டமும், களரியும் வைத்துக்கொண்டு அவர்கள் வாழ்வில் என்ன சாதித்துவிடப் போகிறார்கள்? நல்ல கல்விமுறை என்பது வாழ்வை வளர்பதாக இருக்க வேண்டுமே தவிர, வாழ்வை கெடுப்பதாக இருக்கலாமா என்ற கேள்வியை மக்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறேன்
 ராதே கல்யாணம் :
 அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, இந்தியாவில் கர்நாடக இசைப்பாடகர் இருக்கும் சந்தீப் நாராயணுடன் ராதேக்கு காதல் மலர, சந்நியாசம் மட்டுமே முக்திக்கு வழி, என்னுடன் வந்துவிடுங்கள் என்று அனைவரையும் அன்போடு அழைத்து மொட்டையிடும் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தன் மகளான ராதேக்கு அவள் காதலிக்கும் காதலனையே திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, திருமணமும் முடிக்கிறார்,
 அதுமட்டும் அல்லாது, சன்னியாசிகள் அனைவரும் முக்தியடைய இந்த திருமண முகூர்த்தம் மற்றும் சாந்தி முகூர்த்தம் போன்ற நிகழ்ச்சிக்காக 24 மணி நேரம் உழைத்தால் போதும், முக்தி உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்
 அத்தனைக்கும் ஆசைப்படு என இவர் சொல்வது இவரின் திருப்புதல்விக்கும், இவருக்கும் மட்டும் தான் போலிருக்கிறது,
 ஈஷா யோகாவில் சந்நியாசியாக போனவர்களில் 80% பேர், படித்தவர்கள் மட்டுமே, இப்படி படித்தும் முட்டாள்களாக இருப்பது நம் தவறா?
 இல்லை மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என படித்தும் படித்ததை தேர்வில் கக்கவும் செய்யும் பள்ளிகளின் தவறா?
 இல்லை அனைத்தும் அறிந்தும் கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளின் தவறா?
 யார்மீது தவறாக இருந்தாலும் சரி, நம்மை நாமே மாற்றிக்கொள்ள முற்படுவோம்,
 இறை பக்தி வேறு, மூட நம்பிக்கை வேறு,
 முக்தி என்பது இருக்கிறதோ இல்லையோ தெரியாது, ஆனால் எனக்கான வாழ்க்கை ஒன்று இருக்கிறது, நமக்கான குடும்பம் ஒன்று இருக்கிற, அதை தொலைத்துவிட வேண்டாம்
 உன்னில் நீ மலர பிறர் தேவையில்லை
 – க.பாரதிக் கண்ணன்

Wednesday, August 3, 2016

உலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.




உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும், துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
2008 டிசம்பர் 11 ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/63/139 இலக்கத் தீர்மானப்படி இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கமைய முதலாவது உலக மனித நேய தினம் World Humanitarian Day ஆகஸ்ட் 19 2009 இல் கொண்டாடப்பட்டது.
இத்தினத்தை நாடுகளின் அரசாங்கங்களும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும், மனித நேயம் கொண்டவர்களும் இணைந்து உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரை மோதல் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மேற்கொண்டுள்ள பணிகளில் எட்டிய வெற்றிகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்தும் தருணமாக இத்தினம் விளங்குவதாக ஐ.நா. தகவல் நிலையம் 2010 இல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
உலக வரலாற்றில் மனிதகுலம் பல தடைகளைத் தாண்டி முன்னேறியுள்ளது. ஆரம்பத்தில் கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொண்டு மனிதன் வளர்ந்தான். அடுத்தபடியாக, காட்டுவாழ்க்கையில் புலி, கரடி, சிங்கம், பாம்பு போன்ற கொடிய மிருகங்களின் தாக்குதல்களைச் சமாளித்து வாழக் கற்றுக் கொண்டான். மனிதன் குடும்பமாக வாழத்தலைப்பட்டதும் சமூக வாழ்வில் புதுவித ஆபத்து மனிதனுக்கு வந்தது. மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக மாறி, மற்றவர்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தாக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான் இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது.
ஆயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால்தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது.
“உண்டால் அம்ம இவ்வுலகம்” என்ற புறநானூற்றுப் பாடலில் கூறியபடி, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், தமக்கென வாழாப் பிறர்க்குரிய சான்றோர்களில் சிலர் மனித நேயத்துடன் உலகில் வாழ்கின்ற காரணத்தால்தான், உலகம் என்பது இருக்கிறது. இன – மத – தேச வேறுபாடுகளைக் கடந்து, மனிதனை மனிதனாக மதிக்கும் மனித நேயம் மனித குலத்துக்கு நம்பிக்கையைத் தருகிறது.
“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய், தம்நோய்போல் போற்றாக் கடை” என்பது வள்ளுவம். கல்வியறிவு, செல்வச் செழிப்பு, பட்டம், பதவி ஆகியவை பெருமளவில் ஒருவனுக்குக் கிடைத்திருந்தாலும், அவற்றுடன் மனித நேயம் என்பது அவனிடம் இல்லை என்றால், சேர்ந்துள்ள மற்ற வசதிகளால் அவனுக்கோ அவன் சார்ந்த சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் இல்லாமற் போய்விடும்!
மனிதரின் தன்மையின் உயர் போக்கினை அடிப்படையாகக் கொண்ட உலக நோக்கு மனிதநேயம் ஆகும். சிறப்பாக மீவியற்கை அம்சங்களில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காமல் மனிதரின் பகுத்தறிவை, அறத்தை, ஆற்றலை மனிதநேயம் முன்னிறுத்துகின்றது. அனைத்து மனிதர்களையும் அது மதிப்போடு நோக்குகின்றது. தமிழில் மனிதநேயத்தை மனிதபிமானம், மனிதத்துவம் என்றும் குறிப்பிடுவர்.
மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வாகும். ஆனால் இன்று மனிதாபிமானம் மனிதனிடத்தே செத்துக் கொண்டு வருவதாக பொதுவாகக் கூறப்படுகின்றது. உலகத்தில் வாழக்கூடிய அனைவரும் ஒரே நிலையில் வாழ்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியும். வரலாற்றுக் காலம் முதல் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒரு பொதுவான விடயமே. இன்றைய ‘உலகமயமாக்கல் யுகம்’ இந்த ஏற்றத்தாழ்வுகள் பெரிதும் விரிவடைந்துவிட்ட நிலையில் மனிதன் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் காரணத்தினால் மனிதநேயம் என்பது வெகுவாக குறைந்த வண்ணமே உள்ளது.
இன்று உலகளாவிய ரீதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நாடுகளின் எண்ணிக்கை அதிகம். பொதுவாக இந்நாடுகளில் போசாக்கின்மை, இதன் காரணமாக ஏற்படும் பாதிப்பான விளைவுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வண்ணமே உள்ளது. ஒரு நேர உணவுக்குக் கூட சிரமப்படும் மக்கள் வாழும் நிலையில் அபிவிருத்தியடைந்த நாடுகள் மனிதாபிமானத்தைப் பற்றியும் மனிதநேயத்தைப் பற்றியும் கதைத்துக் கொண்டு தத்தமது நாடுகளின் அபிவிருத்தியையும், பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கோடான கோடி டொலர்களை மூலதனமாக்குவதை நோக்குமிடத்து மனிதநேயம் என்பதற்கு புதிய வரைவிலக்கணத்தை தேடவேண்டியுள்ளது.
உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து போசாக்கின்மை, இயற்கை அனர்த்தங்கள், யுத்த அனர்த்தங்கள், பயங்கர நோய்கள், வறுமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலையை ஆழமாக சிந்திக்க வேண்டியதாக உள்ளது. மனிதன் என்று வரும்போது அனைவரும் எலும்புகளாலும் தசைகளாலும் படைக்கப்பட்டவர்கள். அனைத்து மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே. ஒரு மனிதன் இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ பாதிக்கப்படும்போது அந்த மனிதனின் உள நிலைகளை சிந்திக்க வேண்டியதும், அம்மனிதர்களுக்கு உதவ வேண்டியதும் பாதிப்புக்குட்படாத மனிதர்களின் மனிதாபிமானத்தின் உயர் பண்பாகக் காணப்பட்டாலும்கூட, இதனை எத்தனை பேர் நிறைவேற்றுகின்றார்கள் என்பது கேள்விக்குறியே!
முதலாளித்துவ சமூக அமைப்புக்கள் தலைவிரித்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு செய்யும் உதவிகள் கூட பேருக்காகவும், புகழுக்காகவும், விளம்பரத்துக்காகவும் அமைந்திருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமே. நவீன தொழில்நுட்ப விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எல்லாவற்றையும் சிந்திக்கும்போது மனிதாபிமானத்தின் அடிப்படையை உணரத் தவறுகிறோம். மனிதாபிமான சிந்தனைகள் உயரிய முறையில் முன்னெடுக்கப்படுமிடத்து இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு எப்போதோ முடிவெடுத்திருக்கலாம்.
ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனிதாபிமான தினத்தை பிரகடனம் செய்கையில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் எடுக்கும் தினமாகவும் இத்தகையோருக்கு உதவிகள் வழங்குவோரை கௌரவிக்கும் தினமாகவும் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தது. இத்தகைய நிலைப்பாடுகளுக்கு ஒரு தினம் மாத்திரம் போதாது. பாதிக்கப்பட்டோரின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டியது மனிதாபிமானமிக்க ஒவ்வொருவரினதும் கடமையாகும். இத்தகைய உணர்வூட்டல்கள் சமய ரீதியாக, கல்வியியல் ரீதியாக ஊட்டப்பட வேண்டியது அத்தியாவசியமான ஒன்றே.
மனித உணர்வுகளை ஓரிரு தினங்களுக்குள் மாற்றிவிட முடியாது. ஒரு மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிலை இயல்பாக உருவாக்கம் பெறுமிடத்து இதனால் ஏற்படக்கூடிய பலாபலன் நிலையானது. நிச்சயமாக புகழை எதிர்நோக்காமல் இலாப நோக்கங்களைக் கருத்திற் கொள்ளாமல் இவற்றையே வியாபாரமாக்காமல் உண்மையான நோக்குடன் மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்க வேண்டியது கடமையே. அதேநேரம், உண்மையான நோக்கமிக்கவர்கள் இத்தகைய கௌரவங்களை எதிர்பார்க்கப் போவதுமில்லை.
இலங்கையில் சர்வதேச மனிதநேய தினம்
இலங்கையில் சர்வதேச மனிதநேய தினம் நாடளாவிய ரீதியில் ஆகஸ்ட் 19ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நிகழ்வு கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்தில் நடைபெற்றபோது நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரைநிகழ்த்திய ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ‘நீல் பூனே’ பின்வருமாறு தெரிவித்தார்.
‘……உலக மனிதநேய தினத்தை நாம் ஏன் அனுஷ்டிக்கின்றோம் என்பதற்கு முதலாவது காரணமாக 7 வருடங்களுக்கு முன்னர் ஈராக் பாக்தாத்தில் ஐ.நா.தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 21 மனிதாபிமான பணியாளர்கள் பலியாகியிருந்த சம்பவத்தைக் கூறவேண்டும்….
….. இச்சம்பவத்தில் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஈராக்கியர்களும் பலியாகி இருந்தனர். அத்துடன் ஐ.நா.செயலாளர் நாயகத்தின் உதவிச் செயலர்களில் ஒருவரும் பலியானார். அத்துடன் பாக்தாத் சம்பவம் மட்டுமன்றி மேலும் பல காரணங்களும் உலக மனிதநேய தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்தது….
…. மோதல் வலயங்களிலிருந்து வெளியேறும் மக்களைப் பாதுகாப்பு வழங்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு நாமும் ஆதரவினை வழங்கியிருந்தோம். இம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அரசுடன் எமக்குப் பரந்தளவிலான பங்கு இருந்தது. அக்காலப்பகுதியில் இலங்கையர்கள் (அரச தரப்பு, தனியார் தரப்பு), அரச சார்பற்ற நிறுவனங்கள், பாதுகாப்புப் படையினர், ஐ.நா.உதவி அமைப்புகளுடன் பணியாற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், மக்களின் உயிரைப் பாதுகாக்க சிக்கலானதும் கடினமானதும் உடனடியான பணிகளை மேற்கொண்டிருந்தனர்….
….அத்துடன், மக்கள் தமது இயல்பு வாழ்வைத் தொடர்வதற்குத் தேவையான பலத்தினைப் பெற்றுக் கொள்ளவும் இவர்கள் ஆதரவாகச் செயற்பட்டுள்ளனர். இவற்றிற்கான நிதி அரசினாலும், உள்ளூர் மக்களாலும் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு மக்களாலும் வழங்கப்பட்டுள்ளது….
….மக்கள் விரக்தி அடைந்திருந்த காலத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல சவால்களும் பல சிக்கலான சூழ்நிலைகளும் இருந்தன. இறுதியில் கடின உழைப்பு, சிறந்த ஒத்துழைப்பு, மனிதாபிமானக் கொள்கைகளைப் பிரயோகித்தல், பாதிக்கப்பட்ட மக்களின் முயற்சி ஆகியவற்றின் ஊடாக சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றன. தமது வாழ்வை மீள ஆரம்பிக்கும் தகுதியை மக்கள் பெற்றுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களும் நாட்டிலுள்ள ஏனையவர்களும் சமாதானத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்பை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளனர்….
…..அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான பாதுகாப்பான சுதந்திரமான வாழ்வுக்குரிய நிலையான அத்திவாரத்தை இடவும் மக்கள் மீட்சிபெற்று வாழ்வைக் கட்டியெழுப்ப ஐ.நா.தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்….
….இவ்வருட முதல் 6 மாதத்தில் 5 இலட்சம் மக்களுக்குத் தேவையான உணவு, வடக்கில் 130000 ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான உணவு, மீளக்குடியேறிய 40 ஆயிரம் குடும்பங்களுக்குத் தலா 25 ஆயிரம் நிதி உதவி, 92,800 குடும்பங்களுக்கு உணவற்ற பொதிகள் ஐ.நா.வால் வழங்கப்பட்டது. அத்துடன் 2009 இலும், 2010 இலும் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரச் சேவை வழங்கப்பட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்…
…இவ்வருடம் ஜனவரி முதல் மே வரை அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து 123 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது….
….மக்கள் மீளக்குடியேறிய பகுதிகளில் 2915 கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டதுடன், 515 கிணறுகள் தரமுயர்த்தப்பட்டன. 275 வேலை நாட்களுக்கான பணப்பெறுமதியுடைய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 19,000 குடும்பங்களுக்கு விவசாய, மீன்பிடி, பண்ணை வளர்ப்புக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது….
….75 ஆயிரம் ஏக்கர் வயலும் 17 ஆயிரம் ஏக்கர் நிலமும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக சீரமைக்கப்பட்டுள்ளதுடன், மெனிக்பாம் உள்ளிட்ட முகாம்களில் தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களில் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களின் போஷாக்கின்மை வீதம் 32 ஆக இருந்தது. தற்பொழுது 2 வீதமாக குறைக்கப்பட்டு சிறுவர்கள் போஷாக்குடன் உள்ளனர்…
….புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் 57,673 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அத்துடன் 3,214 வீடுகள் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகள் ஐ.நா.உதவி அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இருந்தாலும் இன்னும் பலதேவைகள் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிறைவேற்றப்படவேண்டியுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுதும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இம்மக்களுக்கு அதாவது அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்குரிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். மெனிக்பாம் மற்றும் ஏனைய முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்…
…அத்துடன் இம்மக்கள் அபிவிருத்தி என்பதையே எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்துடன் ஸ்திரமான சமாதானத்தையும் ஸ்திரமான அபிவிருத்தியினையும் ஏற்படுத்த வேண்டிய தருணம் இது..”வெனத் தெரிவித்தார்.
நிகழ்வின் ஓர் அங்கமாக மன்னாரிலும் இத்தினம் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து மன்னார் சிறுவர் பூங்கா வளாகத்தினுள் மேற்படி நிகழ்வினை நடத்தின. இதன் போது சுமார் 30 ற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற அமைப்புகள் கலந்துகொண்டதோடு நூற்றுக்கணக்கான மனிதாபிமான பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது இயற்கை அனர்த்தம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் இழந்தவர்களையும் நினைவு கூர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பினால் மன்னார், அடம்பன், மடு ஆகிய வைத்தியசாலைகளுக்கு பெறுமதி வாய்ந்த குடி நீரை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதேநேரம் ஏ.சீ.எப். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 ஊழியர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இதுவரையில் தண்டனை விதிக்கப்படவில்லை என பிரான்ஸ் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. 2006ம் ஆண்டு மூதூர் பிரதேசத்தில் தன்னார்வ தொண்டர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படுகொலையாளிகள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் ‘பெர்னாட் குச்னர்’ தெரிவித்துள்ளார். இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் மனிதநேயம் பற்றிய ஓர் தகவல்
இந்தியாவில் சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் அறிவியல் மேதை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009 ஆண்டு இரசாயண வியலுக்கான நோபல் பரிசு பெறுவோரில் ஒருவராக அறிவிக்கப்பட்டவுடன் உலகச் செய்தி ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகள் உலாவரத் தொடங்கின.அவர் பற்றி ‘தி ஹிந்து’ பத்திரிகை அக்டோபர் 08.2009இல் வெளியிட்ட செய்தியொன்றை இவ்விடத்தில் குறிப்பது பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகின்றேன்.
ஓர் விஞ்ஞான மேதையாக அகில அறிமுகம் பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணனின் மனிதநேய மனத்தை அவரது சகாவும் ஓய்வுபெற்ற அணுக்கரு இயற்பியல் துறை பேராசிரியருமான ஜே.எஸ்.பண்டுக்வாலா வெளிப்படுத்தியுள்ளார். வெங்கி என்று செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், சிறு வயது முதலே குஜராத் மாநிலம் வடோதராவில் வளர்ந்தவர். இவரது தந்தையார் வெங்கட்ராமன் மஹாராஜா சாயஜிரங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், தாயார் ராஜலஷ்மியும் குழந்தை உணவூட்டம் மற்றும் உயிர் வேதியல் துறையில் பேராசிரியர்.
பெற்றோர் இருவரும் பேராசிரியர்கள். எனவே இவரையும், இவரது சகோதரியையும் வளர்த்த வேலைக்கார அம்மையார் மீது இவருக்கு பாசம் அதிகம். அவருடைய குடும்பத்தை இவர் இன்றும் பரிவோடு கவனித்து வருகிறார்.
2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சங்பரிவார மதவெறியர்கள் மூட்டிய கலவர நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. வடோதராவில் இருந்த பெஸ்ட் பேக்கரியில் 12 முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பேராசிரியர் பண்டுக்வாலாவின் வீடும் சூறையாடப்பட்டது. இதை அறிந்து மிகவும் வருந்திய டாக்டர் ராமகிருஷ்ணன், தனது நண்பர் பண்டுக்வாலா மூலம், வறுமையில் வாடும் முஸ்லிம் சிறுவர்கள் சிறுமிகளின் கல்வி தடைபடாமல் தொடர நிதியுதவி செய்து வருகிறார். பணம் கொடுத்தோம், கடமை தீர்ந்தது என்று இல்லாமல், அடிக்கடி ஏழை முஸ்லிம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை விசாரித்து அறிவாராம். குறிப்பாக கணிதம், இயற்பியல், இரசாயணவியல் பாடங்களில் அவர்களுக்கு ஆர்வ மூட்டுமாறு பேராசிரியர் பண்டுக்வாலாவிடம் கேட்டுக் கொள்வாராம்.
சிதம்பரத்தில், பிராமண குடும்பத்தில் பிறந்து, குஜராத்திற்கு குடிபெயர்ந்து பின்னர் அமெரிக்காவில் கல்வி பயின்று, அந்நாட்டின் நிரந்தரக் குடியுரிமையையும் பெற்றுள்ள டாக்டர் ராமகிருஷ்ணன், குஜராத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறை செலுத்துவதும், முஸ்லிம் சிறார்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவதும் பாராட்டிற்குரியது.
“மனிதன் அறிவாளியாவது எளிது, அறிவாளி மனிதநேயத்தோடு திகழ்வது தான் அரிதினும் அரிது.”
நோபல் பரிசு பெற்றுள்ள டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அறிவாலும், மனிதநேயத்தாலும் உயர்ந்து நிற்பதுமூன்றாம் உலக நாடுகளில் வாழும் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
புன்னியாமீன்

தலைசிறந்த மனிதநேயம்

வாழ்க்கையில் மனிதநேயம் கொண் டவர்களை எப்போதாவது நாம் சந்திப்பதுண்டு. அந்நேரங்களில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்! நாமும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற சிந்தனை அப்போது எழும்!
சக மனிதர்களின் குறைகளையே பேசிக் கொண்டிராமல், நம்மால் முடிந்த உதவிகளையும், நற்பண்பு களையும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மைப் பின்பற்றியும் சிலர் உருவாகக்கூடும்.
சிலர் நம் நெருங்கிய நட்பு வட் டாரத்தில் இருப்பர். அவர் சிறந்த மனிதநேயராக, பண்பாளராக இருப் பார். ஆனால் அதுகுறித்து நாம் அறியாமல் இருப்போம். ஏதோ ஒரு கட்டத்தில் தெரிய வரும்போது, ஆகா! எவ்வளவு சிறந்த மனிதநேயர் என மகிழ்ந்து போவோம். அப்படியான மனிதர் தான் தி.மா.சரவணன் (வயது 44)
இவர் திருச்சி, கே.கே.நகர் பகுதியில் வசிக்கிறார். தனது 20 ஆவது வயதில் நூல்களை வாசிப்பதிலும், அதனைச் சேகரிப்பதிலும் ஆர்வம் காட்டி யுள்ளார். தனது மாத வருவாயின் ஒரு பகுதியை நூல்களுக்காகவே செலவழித் துள்ளார். (இன்றைக்கு அவரிடம் ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் உள்ளன)
இந்நிலையில் அவர் குடியிருந்த வீட்டிற்கு அருகில் கோமதி (வயது 17) என்கிற பெண், தனது பெற்றோருடன் வசித்துள்ளார். கோமதிக்குப் பிறக்கும் போதே பல்வேறு இருதய நோய்கள் இருந்திருக்கிறது. பல இடங்களில் சிகிச்சை அளித்தும், பயன் இல்லாத தால் அவரின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில்தான் தி.மா. சரவணன் வருகிறார். கோமதியின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என முனை கிறார். திருச்சி, மதுரை,சென்னை எனப் பல்வேறு ஊர்களுக்கும் கோமதியை அழைத்துச் செல்கிறார்.ஆனால் அவரின் இருதய நோய்க்கு உரிய சிகிச்சை இல்லை எனவும், அப்படியே அறுவை சிகிச்சை செய்தாலும் அவரின் உடல்நிலை ஏற்காது எனவும் மருத்துவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஆக கோமதியின் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என அவரின் பெற்றோர் முடிவுக்கு வருகின்றனர்.
இந்நிலையில் கோமதி என்கிற இளம்பெண்ணை, தி.மா.சரவணன் எனும் இளைஞர் பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்றது விமர்சனம் ஆக்கப்படுகிறது. எப்படி ஒரு பெண்ணை இவர் அழைத்துச் செல்லலாம் என்கிற கேள்விகள் வெளிவரத் தொடங்கின?
உயிருக்குப் போராடும் ஒரு பெண்ணை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது தவறில்லை என்கிற சிந்தனையுடன் தி.மா. சரவணன் இருந்துள்ளார். எதையுமே கொச்சை யாகவே பார்க்கத் தெரிந்த சமூகம் இதை ஏற்க மறுத்துள்ளது. இந்நெருக்கடியில் தான் தி.மா.சரவணன் ஒரு முடிவுக்கு வருகிறார். கோமதியைத் தானே வாழ்க்கைத் துணைவராக ஏற்பது என்பதுதான் அந்த முடிவு.
இயல்பாகவே கோமதிக்கு இருதயநோய் இருக்கிறது. இந்நிலையில் இம் மனிதர்களால் கோமதிக்குப் புதிய நோய் எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் இம்முடிவுக்கு வந்துள்ளார். அவரின் இம்முடிவு உறவி னர்கள், நண்பர்கள் வட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவரின் குடும்பத்தில் இதை ஏற்க மறுத்து, அழுதுபுலம்பியுள்ளனர். இன்றோ, நாளையோ இறக்கப் போகும் ஒரு பெண்ணை ஏன் திருமணம் செய்கிறாய்? எனக் கேட்டுள்ளனர். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கோமதியை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார்.
இப்போது திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றோ, நாளையோ எனக் கருதப்பட்ட ஓர் உயிர் 20 ஆண்டுகள் கடந்து வந்திருக் கிறது. அந்த உயிர் 26.04.2008 நின்று விட்டது. கோமதியின் பெற்றோரே ஒரு கட்டத்தில் கைவிட்ட பிறகு, தி.மா.சரவணன் எனும் பெரியாரியத் தோழர் அப்பெண்ணின் மீது நேசம் காட்டி, வாழ்க்கைத் துணைவராக ஏற்று, எந்த மருத்துவமும் இன்றி, அவரின் அன்பினாலும், காதலாலும் 20 ஆண்டுகள் பிழைக்க வைத்திருக்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு செய்தி என்ன தெரியுமா? இவர்களுக்குக் குழந்தை இல்லை. காரணம் என்ன தெரியுமா? உடலுறவுக்கு ஏற்ற உடல்நிலை கோமதிக்கு அமைய வில்லை. இவையனைத்தையும் தெரிந்து தான் தி.மா.சரவணன் இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் மனைவியின் கடைசி நாளில் அவரைச் சந்தித்த போது,  இயல் பாகவே எனக்குத் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமில்லை. இந்நிலை யில்தான் கோமதியைச் சந்தித்தேன். வாழ்நாளோடு போராடும் ஒரு பெண் ணுக்கு நாம் ஏன் நல்ல தோழனாக இருக்கக் கூடாது என்கிற சிந்தனை எனக்குள் வந்தது. இப்போது அந்தத் தோழமை என்னைப் பிரிந்து சென்று விட்டது எனக் கண்ணீர் வடித்தார்.
அக் கண்ணீரில் இச்சமூகம் மனித நேயத்தைப் பெருக்கிக் கொள்ளட்டும்!

மனிதநேயம் மட்டுமே மாமருந்து

சித்திரை முழுநிலவு அன்று மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் இளைஞர் பெருவிழா நடைபெற்றது. விழா முடிந்து ஊர் திரும்பும்போது மரக்காணம் என்னும் இடத்தில் பெரும் ஜாதிக் கலவரம் ஏற்பட்டது. அவ்வழியே வந்த அரசுப் பேருந்துகளும் கொளுத்தப்பட்டன. குடிசை வீடுகள் எரிக்கப்பட்டன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். ""ஜாதிக் கலவரத்தைத் தூண்டுவோர், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அவர் எச்சரித்துள்ளார். அவ்வாறே காவல்துறை மூலம் நடவடிக்கையும் எடுத்துள்ளார்.
சமுதாய நல்லிணக்கத்துக்கு எதிராக ஜாதி மோதல்களை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. மனிதநேயம் மட்டும்தான் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் உருவாக்குமே தவிர, ஜாதி வெறி கலவரங்களையே பெருக்கும்; சண்டை, சச்சரவுகளை வளர்க்கும்; பொதுச் சொத்துகளை அழிக்கும்; சமுதாய உறவுகளைச் சீரழிக்கும்.
நாம் நாகரிகமான குடிமக்கள் என்பதை எப்படி நிரூபிப்பது? சகிப்புத்தன்மை மூலமும், சக மனிதர்களை நேசிப்பதன் மூலமும் மட்டுமே அடையாளப்படுத்த முடியும். அத்தகைய நல்ல, பொறுப்புள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை உருவாகும்; ஒரு கையால் மட்டும் ஓசை ஏற்படாது. இரண்டு கண்களும் சேர்ந்து பார்க்கும்போதுதான் ஒரு காட்சியை ஒழுங்காகப் பார்க்க முடியும். இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். தெரிந்தும் தெரியாததுபோல நடப்பவர்களை என்ன செய்ய முடியும்?
உண்மைகளையும், உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் தலைவர்கள் இல்லை என்பதே எல்லாக் குழப்பங்களுக்கும் காரணமாகிறது. இங்கே மக்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்; அவர்களை வழிநடத்தும் சமுதாயத் தலைவர்கள் சரியாக இல்லை. சுயநலமும், ஒரு சார்பான தீர்மானங்களும் புதிய சமுதாயத்தை, புதிய தேசத்தை உருவாக்க உதவாது.
நமது நாட்டில் நல்ல தலைவர்கள் குறைந்துகொண்டே போகின்றனர். நல்ல தலைவர்கள் அடுத்த தலைமுறையைப் பற்றியே கவலைப்படுவர். அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றியே கவலைப்படுகின்றனர். தலைவர்களே தேசத்தின் முன்னேற்றத்தைப்பற்றிக் கவலைப்படுவர்; அரசியல்வாதிகள் தம் குடும்பத்தைப் பற்றியும், தம் கட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்படுவர். இங்கே வரும் கலவரங்களுக்கெல்லாம் இத்தகைய அரசியல்வாதிகளே காரணங்கள் என்பதை மக்கள் தெரிந்துகொண்டால் நல்லது.
உலகத்தில் மனித இனம் உருவான காலத்தில் அனைவரும் ஒன்றுபட்டு அன்புடன் வாழ்ந்தனர்; இடையில் வந்த ஜாதி, சமய, நிற, இனப் பிரிவினைகள் மனித இனத்தையே கூறுபடுத்திவிட்டது. இது கண்டு வருந்தி வேதனைப்பட்ட ஞானியரும், மகான்களும் செய்யாத உபதேசங்களா?
இராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் சமுதாய மேம்பாட்டுக்காகப் பெரும் பாடுபட்டனர். கேரளத்தில் நாராயண குரு, ஆந்திரத்தில் கோரா, தமிழ்நாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. என எண்ணற்ற மாமனிதர்கள் ஜாதி ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தனர்; கொடி பிடித்தனர்; போராட்டங்கள் நடத்தினர்; மராட்டிய மண்ணில் பிறந்த அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதையும், வாதாடியதையும் வரலாறு மறக்காது.
தமிழ்நாட்டில் அறநூல்களின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. "ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்றார் ஒளவைப் பிராட்டி. இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர் என்றார். இதனை அடுத்து திருமூலர், "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்று முழங்கினார்.
"ஜாதிகளிலே மதங்களிலே சமய நெறிகளிலே அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே' என்று வள்ளலார் பாடினார். இக்காலத்தின் இணையற்ற புலவர் பாரதி, "ஜாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்' என்றார்.
"ஜாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே' என்று வருந்தினார் பாரதிதாசனார். எந்த மாற்றமும் ஏற்படவில்லையே!
நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வகையில் பேசும் அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
"பிரவாசி பலாய் சங்கடன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அரசியல் சட்டத்துக்குப் புறம்பாகவும், ஜனநாயகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வகையிலும் பேசுவதைக் கட்டுப்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை' கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி பேசிவந்தாலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்துக்குப் புறம்பாகப் பேசியதாக ஆந்திரத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேதுல் முஸ்லிமின் கட்சித் தலைவர் அக்பரூதீன் ஒவைசி கைது செய்யப்பட்டார். ஆனால் ஜாமீனில் வெளிவந்த அவர் மீண்டும் அதுபோலவே பேசி வருவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் கவலையளிப்பதாக உள்ளது என்றும், வெறுப்பூட்டும் வகையில் பேசுவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற பேச்சு நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என்றும் அது தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே இப்போது தமிழ்நாட்டிலும் ஆங்காங்கு அரசியல்வாதிகள் மற்றும் ஜாதித்தலைவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. மாமல்லபுரத்தில் கடந்த 25-ஆம் நாள் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவின்போது, உயர் நீதிமன்றம் வெளியிட்ட நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என்று சட்டப் பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விழாவுக்குச் சென்றவர்கள் மரக்காணம் உள்ளிட்ட பல இடங்களில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதோடு, பொதுச் சொத்துகளுக்கும், தனியார் சொத்துகளுக்கும் பலத்த சேதத்தை விளைவித்தனர். பிற கட்சியினரின் கொடிக்கம்பங்களை உடைத்தும், தேசியத் தலைவர்களின் படங்களின் முகத்தில் சாயம் பூசியும் ஜாதி மோதலைத் தூண்டும் விதத்தில் நடந்துகொண்டனர்.
பல்வேறு அரசியல் மற்றும் ஜாதிரீதியான அமைப்புகள் சில காரணங்களுக்காக தங்கள் பலத்தைக் காட்டும் விதத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், மாநாடு, நினைவுதின நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தும்போது அந்த நிகழ்ச்சிகளுக்குப் பெருமளவில் வாகனங்களில் வந்து செல்கின்றனர். குறிப்பிட்ட சாலை வழியே வந்துசெல்லும்போது காவல்துறையினர் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாமல், திறந்த வாகனங்களில் ஒழுங்கீனமான முறையில் நடந்துகொள்ளும்போதும் வழிநெடுக சாலையோர உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறுகளில் ஈடுபடும்போதும் மாற்றுக்கட்சி மற்றும் பிற அமைப்புகளின் கொடி, மற்றும் அடையாளச் சின்னங்களைச் சேதப்படுத்தும்போதும் அவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது காவல்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துவருகிறது.
அதிகமான வாகனங்களில் செல்லும்போது காவல்துறையினர் அறிவுரைகளுக்கு அவர்கள் செவிசாய்ப்பதில்லை. இதுபோன்ற விழாக்களுக்கு காவல்துறையினர் அனுமதியளிக்க மறுத்தால், விழா அமைப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி அங்கே, ""சட்டம், ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் நடக்கமாட்டோம், காவல்துறையினருக்குக் கட்டுப்படுவோம், அமைதிக்கு ஊறுவிளைவிக்க மாட்டோம்'' எனப் பல்வேறு உத்தரவாதங்களை உயர் நீதிமன்றம் முன்பு அளிக்கின்றனர்.
உயர்நீதிமன்றமும் அவர்களின் உத்தரவாதங்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல் கடந்த காலங்களில் இதுபோன்ற விழா எப்படி நடத்தப்பட்டது என்பதைப் பார்க்காமல் சில நிபந்தனைகளின் அடிப்படையில் விழாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் விழா நடைபெறும்போது சென்னை உயர் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. இதுவே இதுபோன்ற கூட்டங்களின்போது பிரச்னைகள் ஏற்படக் காரணமாகிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
"வன்முறையும் அச்சமும் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்' என்று உலகத்துக்குக் கூறினார் நெல்சன் மண்டேலா. வன்முறைக்கு எத்தனையோ முகங்கள் உண்டு, என்றாலும் ஜாதி, சமயப்பூசல்களும் அந்த கோர முகங்களில் அடங்கும். இந்த முகங்களை மறைப்பதற்கு அணியப்படும் அரசியல் முகமூடிகளும் ஏராளம்.
வன்முறையைத் தூண்டுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதைத் தவறு என்று கூற முடியாது. அதிலும் ஜாதி மோதல்கள் ஏற்படாமல் தடுத்திட அரசுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதையே சமூக நல்லிணக்கம் நாடுவோர் விரும்புவர். ஆனால் அதுவே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிடாது. எதிரான விளைவுகளை ஏற்படுத்திவிடவும் கூடும்.
நாம் யாரும் விருப்பத்தோடு ஒரு ஜாதியிலோ மதத்திலோ இனத்திலோ பிறப்பதில்லை. பிறந்ததினால் நம் மீது அவை வந்து ஒட்டிக்கொண்டன. இது நமது உயர்வுக்கும் தாழ்வுக்கும் எப்படிக் காரணமாக அமைய முடியும்? இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
காற்றையும் உணர்ச்சிகளையும் அடக்குமுறையால் தடுத்துவிட இயலுமா? ஜாதி, சமயப் பூசல்களும் அப்படியே. அடக்குமுறைகளால் ஏற்படும் அமைதி தாற்காலிகமானவையே.சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஏற்படும் சமாதானம் நீறுபூத்த நெருப்பாக புகைந்துகொண்டே இருக்கும். ஒரு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்; வாய்ப்பு கிடைக்கும்போதுஒட்டுமொத்தமாகப் பற்றி எரியும். அடிக்கடி ஜாதி, சமய மோதல்கள் ஏற்படுவதற்குக் காரணம் இதுதான்.
""உங்களிடம் அன்பு இருக்கிறதா? இருந்தால் உங்களால் ஆகாதது ஒன்றும் இல்லை. நீங்கள் தன்னலத்தைத் துறந்தவர்களா? அப்படியானால் உங்களை எதிர்க்கும் சக்தி ஒன்றுமில்லை'' என்றார் சுவாமி விவேகானந்தர். தன்னலத்தைத் துறந்து அன்போடு பிரச்னைகளை அணுகினால் தீர்வுகாண முடியும். அதற்கு ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்தை நோக்கிய பயணமே உதவும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளவை வெறும் சலுகைகள் அல்ல; அவர்களுக்குக் காலம்காலமாக மறுக்கப்பட்டிருந்த உரிமைகளின் மிச்ச மீதிகள் என்பதை நாம் உணர வேண்டும்!
(கட்டுரையாளர்:
பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்)

Tuesday, August 2, 2016

ஓர் அடிமையின் கதை-சோஜோர்னர் ட்ரூத்



அமெரிக்காவில் வாழ்ந்த ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட காலக்கட்டம். அடிமை வாழ்வு என்றால் கற்பனைக்கும் எட்டாத கொடூரம் நிறைந்த  வாழ்க்கை. நாள் முழுவதும் கடினமான வேலை. மிகக்குறைவான உணவு. அனல் தெறிக்கும் வார்த்தைகள், அடிகள்... சில நேரங்களில்  கொலைகளாகவும் தண்டனைகள் முடியும். அடிமைகளுக்குப் பிறந்த குழந்தைகளும் அடிமைகளே. அடிமையையும் அடிமைக் குழந்தைகளையும்  யாருக்கு வேண்டுமானாலும் விற்கும் அதிகாரம் அடிமைகளின் உரிமையாளர்களுக்கு உண்டு.

அடிமைகள் குடும்பமாக வசிக்கவே இயலாது. பலருக்கும் விற்கப்பட்டு, உறவுகள் தொடர்பற்றுப் போய்விடும். குளிருக்கு ஏற்ற உடை கிடைக்காது.  தூங்குவதற்கு நல்ல இடம் இருக்காது. ஆண்களும் பெண்களும் கால்நடைகளைப் போல ஓர் அறையில் உறங்க வேண்டும். இந்தக் கொடுமையில்  இருந்து தப்பிச் செல்வது அவ்வளவு எளிதல்ல... மீண்டும் மாட்டிக்கொண்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

இப்படிப்பட்டச் சூழலில், 1797ம் ஆண்டு ஓர் அடிமை தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் இஸபெல்லா. 12 குழந்தைகளில் ஒருவராக இஸபெல்லா  இருந்தாலும் அவரது சகோதர, சகோதரிகளை அவர் பார்த்ததில்லை. பலரும் பல்வேறு நபர்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு  குழந்தை விற்கப்படும்போதும் அம்மாவின் துன்பத்தைக் கண்டு கலங்கிப் போனார் இஸபெல்லா. அதுபோன்ற நேரங்களில், “கடவுளை முழுதாக நம்பு.  நம் கஷ்டங்களுக்கு எல்லாம் ஒருநாள் விடிவு காலம் வரும் என்பார் அம்மா.

இஸபெல்லாவும் கடவுள் மீது அதிக ஈடுபாடுகொள்ள ஆரம்பித்தார். 9 வயதில் இஸபெல்லாவுக்கும் அந்தத் துயரம் வந்து சேர்ந்தது. அவர் ஜான் நீலி  என்பவரிடம் விற்கப்பட்டார். செம்மறி ஆடுகளுடன் இஸபெல்லாவையும் சேர்த்து நூறு டாலர்கள் கொடுத்து வாங்கியிருந்தார் ஜான் நீலி. அதுவரை  டச்சு மொழியை மட்டுமே அறிந்திருந்தார் இஸபெல்லா. ஜான் நீலிக்கு ஓரளவு டச்சு புரியும். அவர் மனைவிக்கோஆங்கிலம் தவிர வேறு மொழி  தெரியாது. மொழி தெரியாமல் அவர்கள் சொல்வது புரியாமல் தத்தளித்தார் இஸபெல்லா. தவறான புரிதல் அவருக்குக் கடுமையான தண்டனைகளைப்  பெற்றுத் தந்தது. குச்சி, கம்பி என்று எதில் வேண்டுமானாலும் அடி விழலாம். சின்னஞ்சிறு இஸபெல்லா மிகவும் சோர்ந்து போனார். அம்மா சொன்ன  கடவுளைத் தவிர அவருக்கு ஆறுதல் தேட வேறு வழியில்லை.

4 ஆண்டுகளில் நான்காவது உரிமையாளருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தார் இஸபெல்லா. இப்போதைய உரிமையாளர் ஜான் டுமண்ட் கனிவாக  நடந்துகொண்டாலும் அவரது மனைவி வழக்கமான கொடுமைக்கார உரிமையாளராகவே இருந்தார். இஸபெல்லாவின் வாழ்க்கை மேலும் மேலும்  சிக்கலானது. ஆனாலும், 5 ஆண்டுகளுக்கு மேலாக அங்கேயே வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது பக்கத்துப் பண்ணையில் வேலை  செய்துகொண்டிருந்த ராபர்ட் என்ற அடிமையின் நட்பு கிடைத்தது. இருவரும் காதலித்தனர். ஒரு குழந்தைக்கும் தாயானார் இஸபெல்லா. இந்த உறவு  ராபர்ட்டின் உரிமையாளருக்குப் பிடிக்கவில்லை. இருவரும் பிரிக்கப்பட்டனர். விரைவில் படுகாயங்களுடன் ராபர்ட் இறந்து போன செய்தி மட்டும்  இஸபெல்லாவை வந்தடைந்தது.

ஜான் டுமண்ட் கட்டாயப்படுத்தி தாமஸ் என்ற அடிமைக்கு இஸபெல்லாவைத் திருமணம் செய்து வைத்தார். வயதான தாமஸுக்கு ஏற்கெனவே  இரண்டு மனைவி, குழந்தைகள். அத்தனை பேரும் விற்கப்பட்டிருந்தனர். தாமஸ்-இஸபெல்லா தம்பதிக்கு வரிசையாக 4 குழந்தைகள் பிறந்தன. 1799ம் ஆண்டே அடிமைகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் அது அமல்படுத்தப்படவில்லை. கொடுமைகளைத் தாங்க முடியாத  இஸபெல்லா, 1826ம் ஆண்டு கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு ஓடினார். ஐசாக் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். டுமண்ட்  அங்கும் தேடி வந்தார். ஐசாக் அவர் சொல்லும் விலைக்கு இஸபெல்லாவை வாங்கிக்கொண்டார்.

அப்போது இன்னொரு செய்தி இஸபெல்லாவுக்கு வந்து சேர்ந்தது. 5 வயதே ஆன மகன் பீட்டரை டுமண்ட் சட்ட விரோதமாக விற்பனை செய்திருந்தார்.  ஐசாக் தம்பதியின் உதவியுடன் நீதிமன்றத்துக்குப் போனார் இஸபெல்லா. பல மாதப் போராட்டத்துக்குப் பிறகு பீட்டரை மீட்டு வந்தார். ஓர்  அமெரிக்கருக்கு எதிராக நீதிமன்றம் சென்று, வெற்றி பெற்ற முதல் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர் இஸபெல்லாதான்! 1839ம் ஆண்டு பீட்டருக்கு  கப்பலில் வேலை கிடைத்தது. ஓராண்டு வரை 3 கடிதங்கள் அவருக்கு வந்து சேர்ந்தன. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல் திரும்பி வந்தபோது பீட்டரும்  வரவில்லை... அவனைப் பற்றிய செய்தியும் கிடைக்கவில்லை.

கடவுள் நம்பிக்கை தீவிரமடைந்தபோது, பல்வேறு நபர்களின் அறிமுகம் கிடைத்தது. மதம் தொடர்பான கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார்  இஸபெல்லா. 1843ம் ஆண்டு தன்னுடைய பெயரை சோஜோர்னர் ட்ரூத் என்று மாற்றிக்கொண்டார். 1844ம் ஆண்டு அடிமைகளுக்கான ஓர் அமைப்பு  உருவானது. கல்வி, வேலை என்று அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்கள் சொந்தக் காலில் நிற்கும் விதத்தில் பல விஷயங்கள் அங்கே செய்யப்பட்டன.  வில்லியம் லயோட் ஹாரிசன், ஃப்ரெடரிக் டக்ளஸ், டேவிட் ரக்ளஸ் போன்ற தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு சோஜோர்னருக்குக் கிடைத்தது.

இரண்டே ஆண்டுகளில் அந்த அமைப்பு தடை செய்யப்பட, சோஜோர்னர் வீட்டுப் பராமரிப்பு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.அடிமை ஒழிப்பு  போராட்டங்கள், பெண்ணுரிமைப் போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்றார். டச்சு கலந்த ஆங்கிலத்தில் அவரது பேச்சும் செயல்பாடும் பலரை  உத்வேகம் கொள்ள வைத்தது. 1851ம் ஆண்டு ஓஹியோவில் நடைபெற்ற பெண்கள் கருத்தரங்கில் சோஜோர்னர் கலந்துகொண்டார். திட்டமிடாமல்  திடீரென உரை நிகழ்த்தினார். அவரது நெகிழ்ச்சியான, பிரமாதமான உரையைக் கேட்டு அரங்கமே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனது. தொடர்ந்து பல  கூட்டங்களில் பேசினார்.

அவருடைய பேச்சுகள் பத்திரிகைகளில் வெளியாயின.உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்தது. அப்போது ‘யூனியன் ஆர்மி’யில் இருந்த அமெரிக்க  வாழ் ஆப்பிரிக்கர்களுக்கு ஆதரவாக உணவுகளையும் துணிகளையும் சேகரித்துக் கொடுத்தார் சோஜோர்னர். வாஷிங்டன் டி.சி. சென்ற சோஜோர்னர்,  வெள்ளை மாளிகையில் அதிபர் ஆபிரகாம் லிங்கனைச் சந்தித்தார். அவரிடம் தன்னுடைய கருத்துகளை எடுத்துரைத்தார்.திரும்பி வந்தவர், முன்னாள்  அடிமைகளுக்கு அரசாங்கம் நிலம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் சுயசார்புடன் இயங்க வேண்டும் என்றும் போராடினார்.

தன் வாழ்க்கையின் இறுதி வரை பெண்ணுரிமை, சிறை சீர்திருத்தம், மரண தண்டனை எதிர்ப்பு என்று பல்வேறு விஷயங்களில் போராட்டங்களை  மேற்கொண்டார் சோஜோர்னர். அவர் மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கு உரிமைகள் கிடைத்தன. அடிமையாகப் பிறந்து, அடிமையாக  வாழ்ந்த சோஜோர்னர் ட்ரூத், 1883 நவம்பர் 26 அன்று விடுதலைப் பெற்ற மனுஷியாக மறைந்தார். போராட்டம் ஒன்றே விடியலுக்கான வழி என்று  நம்பி, வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டிருந்த சோஜோர்னர் ட்ரூத், பின்னர் வந்த பெண் போராட்டக்காரர்களின் முன்னோடி!



Saturday, July 30, 2016

மகா ஸ்வேதாதேவி - பெண்ணியத்தின் நிஐ அடையாளம்

பெண்ணியம்...இதன் அர்த்தம் இங்கே பெண்களுக்கே சரியாகத் தெரியாது.  உண்மையில், எது பெண்ணியம் என்பதை தன்னுடைய பேனாவால் சரியாகப் பதிவு செய்த ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், நம்மிடையே இருந்தார். அவர்தான் ‘மகா ஸ்வேதாதேவி’. மேற்கு வங்காளத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மகா ஸ்வேதாதேவி,  பெண்பால் எழுத்தாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர். அடித்தட்டு மக்களின் உணர்வுபூர்வமான போராட்டங்களை ஒன்றுவிடாமல் பதிவு செய்த நட்சத்திர எழுத்தாளர்... வார்த்தைகளின் நாயகி... சமூக நல சேவையாளர்.






’பல மில்லியன் நிலவுகள் கடந்து போயின. பல மில்லியன் கிரகண வருடங்கள் கடந்து போயின. பல கோடி ஒளி ஆண்டுகளுக்குப் பின்பு, அவளுடைய கண்கள் திறந்தன. திரவுபதி, வானத்தையும், நிலவையும் பார்த்தாள். அவளுடைய அடிவயிற்றில், ஏதோ ஒன்று பாராங்கல்லாய் கனத்தது. அவளுடைய கால்களுக்கு அடியில் பிசுபிசுப்பான ரத்தம்' -  தன்னுடைய கதையான 'திரவுபதி' யில் ஸ்வேதாதேவி வடித்திருந்தது, ஒருத்தியின் வேதனையை அல்ல. சமூகக் கட்டமைப்புகளாலும், பாலியல் சிந்தாந்தங்களாலும் உடல் சிதைக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் வலியையும்தான்.
''பெண்ணியம் என்பது, சுயம் சார்ந்த பிரச்னைகளைப் பார்வையிடுவதல்ல. நம்மைச் சுற்றி அடிமட்ட நிலையில் போராடும் பெண்களுக்கான உரிமைகளை மீட்டுக் கொடுப்பது. ஆதிவாசிகளாகவும், பூர்வகுடிக்களாகவும், வாழ்வின் எளிய நிலையிலும் இருக்கும் பெண்கள் எத்தனையோ சோதனைகளைக் கடந்தும், இன்றும் தங்களுடைய வாழ்வாதாரத்தினைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றார்களே, அதுதான் பெண்ணியம்'' என்று தனது உள்ளத்திலிருந்து வெளியான ஒவ்வொரு எழுத்திலும் பதிவு செய்தவர் மகா ஸ்வேதா தேவி. எழுத்தின் ராணியாக வலம் வந்த, இந்தியாவின் உயரிய ஞானபீட விருது உள்ளிட்ட பல்வேறு வாழ்நாள் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான மகா ஸ்வேதாதேவி,  இன்று நம்மிடையே இல்லை.

தன் 90வது வயதில்,  கடந்த ஜூலை 28 ம் தேதியன்று, தன்னுடைய எழுத்துக்களுடன் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார் மகா ஸ்வேதா தேவி. மேற்கு வங்காளத்தில், பூர்வக்குடிகளாய் சிக்கி துயரில் வீழ்ந்து கதறிய மக்களுக்காக, வாழ்நாள் முழுவதும் போராட்டத்தினை விதைத்தவர். எழுத்தாளுமைகளும், கவிஞர்களும் நிறைந்த குடும்பத்திலிருந்த வந்தவர். 1940களில் கம்யூனிச சிந்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட மகாஸ்வேதாதேவி, வறுமையிலும், அத்தியாவசிய தேவைகளைக் கூடப் பெற முடியாமல் தவித்த மேற்கு வங்கத்தின் தென்னகப் பகுதிகளில் வசித்து வந்த ஆதிவாசிப் பழங்குடியினரின் நலனுக்காக பாடுபட ஆரம்பித்தார்.




தன்னுடைய நிஜ வாழ்க்கையில், கண்டுகொண்ட எளிய மனிதர்களின் வலிகளை, கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய புத்தகங்களில் கதை மாந்தர்களாக வடித்து, அவர்களுடைய வலியையும், வேதனையையும் பதிவு செய்தார் ஸ்வேதா தேவி. வாழ்க்கையில் கடந்து போகும் ஒவ்வொரு சம்பவத்தையும், வார்த்தைகளில் அப்படியே குணம் மாறாமல் வெளிப்படுத்தத் தெரிந்த மகத்தான எழுத்தாளுமைகளில் மகா ஸ்வேதாதேவியும் ஒருவர்.
அவருடைய துணிச்சலான படைப்பாக்கங்களில் ஒன்று, ‘மார்பகங்களின் கதை' (breast story). இப்படியெல்லாம் கூட பெண்களின் மீதான சுமைகள் இருக்கக் கூடுமா என்று வலியை இதயத்தின் உள்ளூடே இறக்கும் கதைகள் இந்தப் புத்தகத்தில் ஸ்வேதாதேவியால் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் எல்லாக் கதைகளுமே பெண்களின் மார்பகங்கள் மீதான சமூகத்தின் கேலிக்கூத்தான பார்வையை கட்டமைப்பதாக அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள  ‘மார்பகம் கொடுப்பவள்’ (breast giver), என்ற கதையின் நாயகி, குடும்பத்தின் வறுமைச் சூழலால் பல வருடங்கள் செவிலித் தாயாக இருந்து பல குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்த்து, ஒருநாள் மார்பகப் புற்றுநோயால் இறந்து போகும் ஜசோதாவின் கதை இது. உடலாலும், மனதாலும் களைத்துப்போன ஒரு பெண்ணின் கதையான இது ஒருநிமிடமேனும் நம்மை உள்ளம் குலைய வைக்கும்.

’என்னுடைய கத்தியால் கீறப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் மனித உரிமைகளுக்காகவும், மனிதர்களுக்குமானது. எழுத்து என்னுடைய உண்மையான உலகம். அதில்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்’ மகா ஸ்வேதாதேவின் வாழ்நாள் வாசகங்கள் இவைதான்.
இப்போதும் அவர் தன்னுடைய வலிமை நிறைந்த படைப்புகளால், நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கத்தான் போகின்றார். ஒரு நூற்றாண்டின் உணர்வுகளாக, தலைமுறைகளின் குரலாக நம்மிடையே நிலைத்து நிற்கப் போகும் மகா ஸ்வேதாதேவி, ’கனவென்பது ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமை...அதை யாராலும் பறிக்க முடியாது’ என்பதை இலக்கிய உலகில், புரட்சி செய்ய நினைக்கும் ஒவ்வொரு எளியவர்களுக்கும் நினைவூட்டிக் கொண்டே இருப்பார்.!


- ப.விஜயலக்‌ஷ்மி
உத்திரபிரதேசம் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை அரங்கேற்றுவதில் பெயர்போன மாநிலம். உ.பி. மெயின்புரியில் ரூ. 15 கடன் பாக்கி வைத்ததற்காக தலித் தம்பதியை ஒரு வெறிபிடித்த கடைக்காரர் கோடாலியால் வெட்டிக் கொன்றிருக்கிறார்.
 விவசாயக் கூலிகளாகப் பணிபுரியும் தலித் தம்பதி, வெறும் ஐந்து ரூபாயை வைத்துக்கொண்டு பணிக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த ஐந்து ரூபாய் ஒரு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக்கொண்டிருப்பதை பார்த்த,கடைக்காரர் நேற்று வாங்கிய பொருட்களுக்காக ரூ. 15 தரவேண்டுமே அதைக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதைத் தந்துவிடுகிறோம் பொறுத்துக்கொள்ளுங்கள் என சொன்ன தம்பதியை கீழ்த்தரமான வார்த்தைகளால் வாட்டியிருக்கிறார் கடைக்காரர் மிஸ்ரா. தம்பதி அப்படி பேச வேண்டாம் எனக் கூறியதைப் பொறுக்க முடியாமல், வீட்டிலிருந்த கோடாலியைக் கொண்டுவந்து அவர்களைத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தம்பதி இறந்தவிட்டனர்.
 குடிசையில் வசிக்கும் அந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும் மூன்று மகன்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மூன்று மகன்களும் முறையே 15, 13, 8 வயதுடையவர்கள். இவர்கள் அனாதரவாக நிற்கின்றனர்.
 “வாங்கிய பிஸ்கெட்டை உறைகளைப் பிரிக்கும் முன்பே என் பெற்றோர் கொல்லப்பட்டுள்ளனர். என்னுடைய மூன்று தம்பிகளை வைத்து காப்பாற்றும் அளவுக்கு என்னுடைய வாழ்க்கை இல்லை. நாங்கள் உழைப்பது எங்களுடைய வயிற்றுப் பாட்டுக்கே போதுமானதாக இல்லை” என்கிறார் கொல்லப்பட்ட தம்பதியின் இரண்டாவது மகள் மிலன்.
 மாநில அரசு ரூ. 5 லட்சம் உதவித்தொகை அறிவித்துள்ள நிலையில், எப்போது அவர்களுடைய கைகளில் சேரும், அதுவரை அந்தச் சிறுவர்களின் நிலை என்னாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கோமாதா புத்திரர்கள் சுமக்கட்டும்!’’...................
 மத்திய பிரதேசத்தில் மண்டசூர் என்னும் ஊரில் ரயில் நிலையத்தில் வீட்டு உபயோகத்திற்காக இறைச்சி வாங்கிவந்த இஸ்லாமியப் பெண்களை கவுரக்ஷா தள் அமைப்பினர் கடுமையாக தாக்கினர். தாக்கியது மட்டுமல்லாமல் இந்த நிகழ்வை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் இனி பசுவைக் கொல்ல நினைத்தால் கூட அவர்களுக்கும் இந்த நிலைதான் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
 வன்முறை நடந்தபோது வேடிக்கை பார்த்த காவல்துறையினரின் செயலும் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதை வேடிக்கை பார்த்த பொதுமக்களும் தடுக்க முயலாமல் கைப்பேசியில் படம் எடுத்தபடி இருந்தனர். காவல்துறையினரோ அரை குறை மனதுடன் தாக்கியவர்களை விலக்கி விட முயற்சித்தனர். ஆனால், பல சமயங்களில் அவர்கள் வேடிக்கை பார்த்தபடியே நின்றிருந்தனர்.
 இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அந்தப் பெண்களை காலால் உதைத்தும், கையால் அடித்தும், கன்னத்தில் அறைந்தும் மோசமாக நடந்து கொண்டது. இதற்கு சற்று முன்னதாக காவல்துறையினருக்கு சிலர் பசு கறியுடன் வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் வந்தனர். அந்த சமயத்தில்தான் அப்பெண்கள் இருவரும் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
 தாக்கப்பட்டவர்களையே காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது. அப்போதும்கூட அக்கும்பல் அப்பெண்களை தொடர்ந்து விடாமல் தாக்கியபடியே சென்றனராம்.
தாக்குதல் நடத்திய கும்பல் புனித கோமாதாவுக்கு ஜே என்று வாழ்த்தி முழக்கம் போட்டனர். அவர்கள் தாக்கியதில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த வன்முறை தாக்குதல் நடந்தது.
பின்னர் காவல்துறையினர் கூறுகையில், இவர்கள் பசுவின் கறியைக் கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது; இதையடுத்து நாங்கள் அவர்களைக் கைது செய்து இறைச்சியைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினோம். சோதனையில் அது எருமை மாட்டின் இறைச்சி என்று தெரிய வந்துள்ளது என்றனர்.
 இருப்பினும் இரு பெண்கள் மீதும் காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனராம். இது தொடர்பாக சமுக வலைதளத்தில் கவு ரக்ஷா தள் அமைப்பினர் இந்த தாக்குதல் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்றை எழுதியுள்ளனர்.
 அதில் இனி பசுவைக் கொல்ல மனதால் நினைப்பவர்களுக்கும் இதே தண்டனைதான்; அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி என்று எழுதியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் கூறும் போது பொதுமக்களின் கோபம் நியாமானதே!
 பசுவை அவர்கள் தாயாக மதிக்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர். இருப்பினும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
வட மாநிலங்கள் முழுவதும் சங் பரிவார்களின் போக்கு பாசிசத்தின் உச்சத்தில் நிர்வாண ஆட்டம் போடுகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? அரசமைப்புச் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா? தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற தறுதலைத்தனம், தலைக்கனம் தாண்டவம் ஆடுகிறது. நாடாளுமன்றத் தில் தட்டிக் கேட்ட மேனாள் முதலமைச்சரையே (மாயாவதியை) தரக்குறைவாக ஆளும் பி.ஜே.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் நாக்கில் நரம்பின்றி ஏசித் தீர்க்கிறார்.
இதைவிட இன்னும் மோசமான, கேவலமான நிகழ்வுகள் நாட்டில் நடந்தாலும் இந்தியாவின் பிரதமர் கண்டு கொள்ளவே மாட்டார் - உள்துறை அமைச்சரும் வாய்த் திறக்க மாட்டார்.
 குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ‘செத்த மாட்டைத் தூக்கமாட்டோம் - கோமாதா புத்திரர்களே - உங்கள் மாதாவை நீங்களே தூக்குங்கள் - சுமந்து சொல்லுங்கள்!’ என்று கூறிச் சென்றனரே - அந்த நிலைதான் இந்த இந்துத்துவாவாதிகளைக் கொஞ்சம் கீழே இறங்கி வரச் செய்யும்.
நாடு முழுவதும் இந்த நிலை தொடரட்டும், தொடரட்டும்!
 அப்பொழுதுதான் ஆதிக்க வெறியர்கள் இறங்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!

Friday, July 29, 2016

மனிதம் மறந்த கல்வி

கடந்த, 1990களில் ஆரம்பித்த தகவல் தொழில்நுட்ப புரட்சி, நம் கல்வித் திட்டத்தை மறு சீரமைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. தகவல் தொழில் துறை இன்று மிகப் பிரமாண்டமாக உருவெடுத்து, அனைத்துத் துறைகளிலும் காலுான்றி இன்றியமையாத சக்தியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. கல்வித் துறையும் இதற்கு ஓர் விதி விலக்கல்ல.
கல்வி என்றால் அது தகவல் தொழில் நுட்பம் சார்ந்ததாக இருந்தால் மட்டுமே சிறக்க முடியும் என்ற கருத்தும் இன்று சமுதாயத்தில் வளர்ந்து, வேரூன்றி இருப்பதும் வருந்தத்தக்க ஓர் நிகழ்வேயாகும். மனிதநேயம், அடிப்படை அறிவியல், கலை, பண்பாடு, மொழியியல் மற்றும் இலக்கியம் சார்ந்த புலன்களில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையும் இதற்குச் சரியான ஓர் எடுத்துக்காட்டு. தொழில் நுட்ப வளர்ச்சி துவங்கி, 20 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், சமுதாயத்திற்கும், மானுடத்திற்கும் கல்வித்துறை மூலமாக இதனால் என்ன பயன் கிட்டியது என்பது போன்ற பல வினாக்கள் இன்று எழுப்பப்படுகின்றன.
இந்த சூழலில் கல்வித்துறை தன்னை மேம்படுத்திக் கொண்டதா என்ற கேள்வியும் ஒருபுறம் எழுகிறது.தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் அடைந்த நற்பலன் என்பன ஒருபுறம் இருந்தாலும், கல்வித் துறையும், இந்த தலைமுறையும் எதையோ இழந்து விட்டது போன்ற ஓர் நெருடல் இருப்பது ஒருவகையில் உண்மையே எனலாம்.
விவாதிப்போம்... ஏனெனில், சுயபரிசோதனைக்கு இதுவே மிகச் சரியான நேரம். கல்விச்சாலைகள் இன்று தெளிவான லாப நோக்கத்துடனேயே துவங்கப்படுகின்றன. தொழிற் கல்வியின் தேவை ஒருபுறம் இருந்தாலும், மேற்கூறிய கலை மற்றும் இலக்கியத் துறைகள் பின்னடைவு அடைந்திருப்பது நிச்சயமாக ஒரு நல்ல அடையாளம் அல்ல. அரசு பள்ளிகளிலும் இன்று தொழிற் கல்விக்குக் கிடைக்கும் முக்கியத்துவம், தாய் மொழி பயில்தலுக்குக் கிட்டாதது மிகவும் வருந்தத்தக்க நிலை. இதற்கான காரணம் எதுவென ஆராயும் போது, பெற்றோரின் ஆங்கில மோகமும், தங்கள் பிள்ளைகள் தொழில் அல்லது மருத்துவத்துறையில் புகுந்து பெரும்பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆசை (பேராசை)யும் தான் மூலகாரணங்கள் எனலாம்.
தனிப்பட்ட எந்த ஒரு மனிதனும் தன் குடும்பம் மற்றும் பிள்ளைகள் குறித்து தன்னுடைய குறிக்கோள்களை வகுத்துக் கொள்வது இயல்பு தான். ஆனால், தமிழ் மாந்தர் யாவரும் இதே நோக்கில் பயணிக்க ஆரம்பித்தால், இவ்வுலகிலேயே மிகத் தொன்மையான மொழியாம் நம் தமிழ் மொழி மற்றும் அது சார்ந்த கலாசாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை கற்பவர் யார், கற்பிப்பவர் யார்? நம் இலக்கியங்களில் புதைந்து இருக்கும் உன்னத கூற்றுக்களையும், ஆழ்ந்த சிந்தனைகளையும் இந்த தலைமுறை பயில்வது இனி எக்காலம்?
இந்தக் கூற்றைப் படிப்பவர்கள், இது ஏதோ வெறும் ஒரு மொழி வெறி பிதற்றல் என்று கூட முடிவு செய்யலாம். ஆனால் இன்றைய நிகழ்வுகள் இந்த பிதற்றலிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்த்தும். தொழில் மற்றும் தொழில் நுட்பம் வளர்ந்து என்ன பயனை நாம் கண்டு விட்டோம்? புலம் பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைக் காண்கிறோம்.
புலம் பெயரும் நோக்கத்தில் தொழிற்கல்வி கற்பவர்கள் பெரும்பாலும் தங்கள் இணக்கத்தை பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு அர்ப்பணிக்கின்றனரேயன்றி இந்த நாட்டுக்கோ, தங்கள் மொழிக்கோ, தங்கள் நன்றியுணர்வை காட்டுவது இன்று குறைந்து வருகிறது.
தொழிற் கல்வி வளர்ச்சி, மதிப்புக் கல்வியின் அவசியத்தை குறைத்து விட்டது என்பதை யாரும் மறுக்க இயலாத உண்மை. இதோடு புதைந்து போனது, மானுடமும், மொழி நேயமும் தான்.
தொழில் நுட்ப பள்ளி மாணவர்களின் கைகளில் உள்ள மடிக்கணினி அல்லது அலைபேசியில் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும், கையடக்கத்தில் கொண்டு சேர்க்கும் தன்மை வாய்ந்தது.மாணவன் ஒருவன் அலைபேசியில் நீலப் படம் பார்த்து கொண்டு இருந்த போது சிலிப்புற்று, எதிரே வந்த பிஞ்சு மாணவி ஒருத்தியை சிதைத்தது, இன்றைய நாளின் கொடுமை.
காதலை ஏற்க மறுத்த பெண்ணின் முகத்தில் அமிலம் வீசும் கொடுமை கள் அதிகரித்து வருவதும், இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சியதின் காலகட்டத்தில் தான்.
தாய், தந்தையர் மீதுள்ள பாசமும், பெரியவர்கள் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்து, பெருநகரங்களில் புற்றீசல் போல் வளர்ந்து வரும் மூத்த குடிமக்களுக்கான காப்பகங்களும் இன்றைய தலைமுறையின் சகிப்பு தன்மையற்ற, நன்னடத்தையற்ற வாழ்க்கை முறைக்கான உதாரணங்களில் ஒன்று. பணம் ஒன்றே வாழ்க்கை என்ற இலக்கு நோக்கி பயணம் செய்யும் போது, பாசத்திற்கும், மானுடத்திற்கும், மனித நேயத்திற்கும் இங்கே என்ன வேலை என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
தவறு என்பது இங்கே, இந்நாளில் துவங்கியது அல்ல! பெற்றோரின் பேராசையில், சிறு வயது முதல் பள்ளிகளில் நாம் புகுத்திய ஆங்கில மோகத்தாலும், தொழிற் கல்விக்கு நாம் கொடுத்த முக்கியத்துவத்தாலும், அதன் பொருட்டு அழிந்து போன மானுடம், மனிதநேயம் மற்றும் மதிப்பு சார் கல்வியும் காரணிகளாக இருக்கலாம்.
மறைந்து வரும் நம் பண்டைய இலக்கியங்களில் புதைந்திருக்கும் சகோதரத்துவம், மனிதநேயம், ஒழுக்கம், அன்பு, அருள் போன்ற உயரிய சிந்தனைகள் தற்காலத் தலைமுறைக்கு சென்று அடைய வேண்டிய காலம் கடந்து போய் கொண்டிருக்கிறது.நாம் விழித்துக் கொள்ள இதுவே சரியான தருணம். இனியும் காலம் தாழ்த்தாது செயல்படத் துவங்கிடுவோம். இதனால் நாம் தொழிற் கல்விக்கு எதிரானவர் என்று கொள்ள வேண்டாம்! தொழிற் கல்வியும் வேண்டும் தான்; அதனுடன் நம் தமிழ் இலக்கியங்களுக்கான உரிய மாண்பும், மரியாதையும் அளிக்கவும் பயிற்றுவிக்க வேண்டும். மானுடமும், தமிழினமும் தழைக்க வேண்டுமென இன்றே துவங்கிடவும் வேண்டும்.
வாழிய மானிடம் ! வாழிய தமிழ்மொழி!


ப.ராம் மோகன்,
எழுத்தாளர், துணை ஆணையர்,
மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை
இ-மெயில்: prmohan1969@yahoo.co.in

நன்றி:www.dinamalar.com

Thursday, July 28, 2016

மன்ஜி-சிறந்த முயற்சி

மன்ஜி" ஹிந்தி திரைப்படம்.
 -செ. நிருபன் சக்ரவர்த்தி.
 இது பீகாரை சேர்ந்த தஸ்ராத் மன்ஜி என்பரின் வாழ்கை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது .
 திரைப்படத்தில் ஒரு தலீத்தாக நடித்து , கதைக்கு உயிர் கொடுத்த நடிகர் நவாசுதீன் சித்திக் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்தே ஆகவேண்டும் .
 திரைபடத்தில் காதலுக்கும் , நகைக்சுவைகும் பஞ்சமே இல்லை .
 பொதுவாக தலீத்கள் பற்றி திரைப்படங்கள் வருவதே அரிது. ஏன்னெனில், தலீத்கள் இன்னும் முழுமையாக சினிமாக துறைக்குள் நுழையவில்லை . அதனால் முதலில் திரைபடத்தின் இயக்குனர் கேட்டன் மேத்தா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தே ஆகவேண்டும் .
 திரைப்படம் , ஒரு கணவன் அவனது மனைவி மீது வைத்த காதலின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளது.
 திரைப்படம் தலீத் மக்களின் இன்னல்களையும் , ஆதிக்க சாதியிரினரின் அரக்க குணத்தை தெளிவாக திரையிட்டு காண்பித்துள்ளது.
 திரைப்பட தொடக்கத்தில் , ஒரு தலீத் இந்தியர் செருப்பு அணிந்து சென்ற குற்றத்திற்க்காக , அவரின் கால் பாதத்தில் லாடம் கட்டும் தண்டனை என , தலீத் பெண் கற்பழிப்பு வரை ஆதிக்க சாதிவெறியை திரைப்படம் தெளிவாக காண்பித்துள்ளது.
 டாக்டர் . திரு .அம்பேத்கார் அவர்கள் போராடி சாதி கொடுமையிலிருந்து தலீத்களை மீட்க உருவாகிய சமத்துவ சட்டம் அமலுக்கு வந்த நாளை தலீத் மக்கள் கொண்டுவது , ஒரு உண்மையான தலீதுக்கு திரைப்படம் கவின் மிகு காட்சியாக அமைந்திருகிறது .
 தலீத் நக்சலைட்கள் உருவாக்கி , மக்களின் உழைப்பை சுரண்டும் ஆதிக்க சாதி நிலசுவான்தரை தூக்கிலேற்றுவது என ஆயுத புரட்சியின் வடிவத்தை திரைப்படம் செம்மையாக வடிவமைத்துள்ளது .
 திரைபடத்தின் மைய கதை என்னவெனில் ,
 மன்ஜியின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக மலையை கடந்து வயலுக்கு செல்லும் போது , தவறி விழுந்து இறந்துவிடுகிறார் . இதனால் மன்ஜி கோவம் கொண்டு , சுமார் முப்பது வருடத்திற்கும் மேலாக தனிவருவனாக அவ்வளவு பெரிய மலையையே உடைத்து சாலை அமைக்கிறார் . தனது மனைவிக்கு ஏற்பட்ட நிலை இனி எவருக்கும் உருவாக கூடாது என லட்சியத்தோடு பல ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை கடந்து செய்து முடிக்கிறார் . ஒரு தன்னம்பிக்கை திரைப்படம் .

பெண்ணின் கற்பெனும் மடமை:
கற்பு கற்பு.... என சொல்லி பெண்களை முட்டாளாக்கும் மாய வலையை தமிழ் சினிமாக்கள் எப்போதும் விரித்துக்கொண்டே இருக்கும்.
 நான் அடிகடி சினிமாக்களை உதாரணமாக சொல்ல காரணம்... சினிமா என்பது ஒரு இலக்கியத்தின் தோன்றல், பாமரனைகூட அரசியல் பேச வைத்துவிடும்.
 சினிமாக்களில் பழைய படங்களில் , ஒரு பெண் ஒரு கயவனால் கற்பழிக்கப்பட்டால் , அடுத்த காட்சியே அந்த இயக்குனரின் படைப்பில் அவள் தன்னை தானே குத்திக்கொண்டு இறந்து விடுவாள் அல்லது அவள் தற்கொலைக்கு முயன்று நாயகனால் காப்பாற்றபட்டு மீண்டும் அந்த கயவனுக்கே திருமணம் செய்து வைக்கப்படுவாள். இது பெண்ணடிமையின் முதல் ஃபார்முலா.
 எதார்த்தத்தில் கற்பு என்பது , உடலுக்கு அப்பார்பட்டது. கற்பு என்பது மனத்தின் எண்ணவோட்டத்தின் பிரதிபளிப்பு.
 சிலரால் கொடூரமான முறையில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் வாழ்கை அத்தோடு முடிந்ததா என்ன!
 அதில் அவள் செய்த தவறு என்ன?
 இன்று இணைய தளத்தில் பெண்கள், அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மலம் கழிப்பதை , சிறுநீர் கழிப்பதை , குளிப்பதை படமெடுத்து விட்டுவிடுகிறார்கள். இதனால் அந்த பெண்ணின் கற்பு போய் விட்டதா...! வாழ்வே முடிந்து விட்டதா... ?
 கற்புக்கு விளக்கம் புரியாதவர்கள் , பெண்களின் உடலில் இன்னும் கற்பை தேடிக்கொண்டே தான் இருக்கிறார்.
 வெறும் பெண்ணின்உடல் இணையத்தில் சுற்றுவதால் கற்பு போய்விட்டது என நான் கருதியிட்டதே இல்லை.
 மிருக பிறப்பை வழியாக கொண்ட நாம் , ஆடையை போட்டுக்கொண்டே சீதோசன பாதுகாப்பு வேண்டியே.,
 அதனால் ஒரு ஆடு , மாடு களின் நிர்வாண உடலை பார்க்கும் போது எப்படி தோன்றுகிறதோ அதே படைப்பில் தான், மனித இனமாகிய நாமும்.
 இணையதளத்தில் வளம் வரும்அப்பாவி பெண்களே , கலங்காதீர் ... உங்கள் உடல் மட்டுமே தெரிகிறது. உங்கள் கற்பு இன்னும் கலங்கபடவில்லை. தற்கொலைக்கு செல்லாதீர்.
 உங்களை படமெடுத்து மிரட்டும் ஆண்மையற்றவனை கண்டு அஞ்சாதீர். அவனுக்கு இனங்காதீர். எதிர்த்து நில்லுங்கள். அவனை துரத்தி அடியுங்கள்.
 உங்கள் கற்பை உணரும் ஆண்மகன் , நிச்சயம் சாதாரண ஆண்களை போல அல்லாமல் , ஆழத்தில் எடுத்த முத்தை போல உளவியல் சிந்தனை பெற்றவனாக இருப்பான்.